பாபா ராம்தேவ்

ஆன்மீகத்துக்கும் அரசியல் பண்ண ஆசைதான்!

 

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் , அரசியல் நடவடிக்கைகளில் தீவிர ஆர்வம் காட்டி வருவதை தேசிய கட்சிகளான காங்கிரஸும் ,பா.ஜ.கவும் கவலையுடன் கவனிக்க ஆரம்பித்துள்ளன. சும்மா பேச்சுக்காகத்தான், அரசியல் பற்றிப் பேசுகிறார் என்று நினைத்த இந்தக்கட்சிகளின் தலைவர்கள் , இவரது தீவிரத்தைப் பார்த்து கலங்கிப் போயுள்ளனர். நாடு முழுவதும், அதிகரித்து வரும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக கையெழுத்துப் பிரச்சாரம் துவங்கப் போவதாக இவர் அறிவித்ததுதான் இதற்குக் காரணம். ‘ஊழல் விவகாரத்தில் ஏற்கனவே எதிர்கட்சிகள் கொடுக்கும் தொந்தரவையே தாங்கமுடியலே. இந்த நிலையில் இவருடைய தொந்தரவு வேறா?’ என புலம்புகின்றனர். பா.ஜ.க.வுக்கும், இவரைக் கண்டு பயம்தான். தங்களுக்கு ஆதரவான ஆன்மீக ஓட்டுகளையெல்லாம்,இவர் வளைத்து விடுவாரோ என கவலைப்படுகின்றனர். ”உங்களுக்கு அரசியல் எதுக்கு?” என சிலர் சொல்லிப்பார்த்ததையும் கண்டுகொள்ளாத ராம்தேவ், அரசியலை ஒரு கை பார்த்துவிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

சீட் கிடைக்குமா?…..மாஜிக்களின் கவலை!

பா.ஜ.க.வுல இருந்து மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு,காங்கிரஸுக்குத் தாவிய திரு நாவுக்கரசர்தான் தவிப்பில் இருக்கார். தமிழக அரசியல் வித்தை தனக்கு அத்துபடிங்குறதாலே,காங்கிரஸ் கட்சியில முக்கியத்துவம் தருவாங்கன்னு நினச்சாருங்க. ஆனா கட்சியில சேர்ரதுக்கே ரொம்ப சிரமப்பட்டுட்டாருங்க. கட்சியில சேர்ந்த அப்புறம், பதவியப் பிடிக்க வாசன், சிதம்பரம், தங்கபாலுன்னு வரிசையா ஒவ்வொரு தலைவரா நெருங்கிப் பாத்தாரு. ஆனா,யாருமே அவருக்கு பதவி கிடைக்கிறதுக்கு வழி காட்டலே. ..இப்ப, சட்டசபைத் தேர்தல் நெருங்கி வர்ரதாலே தனக்கு சீட்டாவது கிடைக்குமான்னு எதிர்பார்ப்போட காத்துட்டிருக்காருங்க. என்னத்தச்சொல்றது? ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு சொல்றதா?

 

ப்ரேமானந்தா மரணத்துக்கு நீதிவிசாரணை

பிரேமானந்தா

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். கோவையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்குகூட, தமிழக அரசு பொது மன்னிப்பு வழங்கியது. ஆனால், பிரேமானந்தாவை மருத்துவ சிகிச்சைக்காகக்கூட, விடுதலை செய்யவில்லை. பிரேமானந்தவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லையோ, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, பிரேமானந்தாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதாக அமைகிறது, அந்த அறிக்கை. கொலை, கற்பழிப்பு குற்றங்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறையிலிருந்த பிரேமானந்தாவை நோய்கள் சூழத் தொடங்கின. நீரிழிவு நோய் தாக்கியது. கண்பார்வை மங்கியது. கல்லீரல் வீக்கம், சிறு நீரகம் செயல்படவில்லை. கடலூர் மருத்துவமனை, சென்னை ராயப்பேட்டா மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவ மனை என்று சிகிச்சை அளிக்கப்பட்டு பிரேமானந்தாவின் உயிர் ஒரு தனியார் மருத்துவ மனையில் பிரிந்தது. பிரேமானந்தாவுக்கு தேவையான சிகிச்சையை தேவையான நேரத்தில், சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை, என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை பிரேமானந்தாவின் சீடர்களோ, ஆன்மீகவாதிகளோ கையிலெடுக்கக் கூடும் என்று காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் நேரத்தில் எல்லாமே அரசியல்தாங்க! நேரம் அப்படிப்பட்டது. சிறு நெருப்பும் பத்திக்குமே!

Advertisements