டாக்டர்ஸ்

மருத்துவர்களின் ஆறுதலான வார்த்தைகள் மருந்துகளைவிட அதிகப் பலனை அளிக்கின்றன என்பதால் நமக்கு மனச் சோர்வு ஏற்பட்டால், மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவோம். ஆனால், அந்த மருத்துவருக்கே மனச் சோர்வும் கவலையும் ஏற்பட்டால், அவர் எங்கே போவார்? இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்திலிருந்து ,பொதுமக்களைவிட மருத்துவர்களிடம் தற்கொலை விகிதமும், மதுவால் கல்லீரல் அழற்சி ஏற்படும் விகிதமும் அதிகமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. மன இறுக்கம் மருத்துவரின் உடல் நலத்தைக் குறிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. மருத்துவர்களின் பணி, நிறைய வருமானம் அளிப்பதாகவும், அதிக சுவாரஸ்யம் ஊட்டுவதாகவும் இருக்கும்போது , அவர்கள் மன இறுக்கங்களாலும், உணர்ச்சிகளாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம்? மருத்துவர்கள் சிலவேளைகளில், தமது நோயாளியின் தலைவிதியை, வாழ்வு அல்லது சாவை நிர்ணயிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, ஊண், உறக்கம் இழப்பது உண்டு. அவர்களுக்கு மற்ற எல்லோரையும்விட மிக அதிகமாக மன இறுக்கம் ஏற்படுகின்றது. நோயாளிகளுக்குத் தவறான சிகிச்சை அளித்துவிட்டு, அதனால் வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் , மேலை நாட்டு மருத்துவர்களுக்கு மன இறுக்கத்தை உண்டாக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று. டாக்டருக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் நோயாளிகளை எந்த அளவுக்கு பாதிக்கின்றன என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. நோயாளிகளின் நலன்களை பாதுகாக்க ஏதாவது ஏற்பாடுகள் இருக்கின்றனவா? எந்த டாக்டர் மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு ; அதிலும் ஒரு நோயின் பிடியிலிருக்கும் நோயாளி தன் நோய் வேதனையைத் தவிர வேறெதையும் சிந்திக்கும் மன நிலையிலும் இருக்கமாட்டார். எனவே, நோயாளியைக் காப்பாற்ற முதலில் மருத்துவரைக் காப்பாற்றணும். ஆய்வாளர்களே! மருத்துவரைக் காப்பாத்துங்க!.
***************

Advertisements