நண்பர்கள் சிலரின் அறிவுரையின் பேரில்,குடும்ப நகை வகைகளை விற்று காசாக்கி, காசை விசாவாக்கி பயணச்சீட்டாக்கி பிடிக்காத பயணத்தை குடும்ப நலன் கருதி மேற்கொண்டான் அவன். அவனை நம்பியிருந்த பல குடும்ப உறுப்பினர்கள் அவனின் நல்வாழ்க்கைக்காக பிரார்த்தித்தார்கள்.

கண்ணீரின் துணையுடனும் கனத்த மனதுடனும் அந்த வெளிநாட்டிற்குள் நுழைந்தான் அவன். தூரத்து சொந்தம் ஒருவரின் வீடு மிகச் சிறியதாக இருந்ததால் தூரத்து சொந்தம் நெருங்கிய சொந்தமாகவே இருந்தது. தூரத்து சொந்தம் இவனது வருகையால் முகம் சுழித்தது.

ஊரிலிருந்து குடும்பத்தார்கள் தொலைபேசியில் ‘இவன் அங்கே வந்து உங்க வீட்ல தங்க அனுமதிப்பீர்களா?’ என்று கேட்டதற்கு ‘இதெல்லாம் கேக்கணுமா, நீங்க..?, வீடிருக்கு வாசலிருக்கு வசதியிருக்கு.. நல்ல தாராளமா வந்து எவ்வளவு நாள் வேணும்னாலும் தங்கிக்கிக்கட்டும்..’ என்று வாய் நிறைய மட்டுமே பேசிய அவரின் மனதில் எப்போ இவன் இந்த வீட்டை விட்டு வெளியாயுவான் என்று இருந்தது.

இவனிடம் ஒரு முறை இப்படி சொல்லியே விட்டார், ‘இங்கே எல்லாம் வேல கெடைக்கிறது எல்லாம் கஷ்டம்.. ஊர்லயே கட வச்சிகிட்டு ஒக்கார்ந்தா நல்ல வரும்புடி.. நீயே ஒங்க வூட்டுக்கு டெலிபோன் போட்டு நீயே சொல்ற மாதிரி இப்போ முன்னய மாதிரி இல்ல.. ரொம்ப கஷ்டம்’ என்று சொல்லி விடு.

அவன் அவர் சொன்னது போல் டெலிபோன் போட்டான் ஆனால் அவர் சொல்லி கொடுத்தது மாதிரி சொல்லவில்லை, அந்த தூரம் இப்படி சொல்ல சொல்லியது என்று விலாவாரியாக சொல்லி விட்டான். உடனே ஊரிலிருந்து இன்னொரு நண்பர் வீட்டுக்கு இப்போது டெலிபோன் போட்டு தூரத்திடம் பாடிய பல்லவியை நண்பர்களிடம் பாடினார்கள்.

அவர்கள் ‘அதுக்கென்ன, நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம், நான் நாளைக்கே புள்ளைய எங்கிட்டே கூப்டுக்கிறேன்..’ என்று நண்பர்கள் வீடு தனது மகனையே மோட்டர் பைக்கில் அனுப்பி அவனை அங்கே கூப்பிட்டுக் கொண்டார்கள்.

தூரத்திடமிருந்து விடைபெறும் போது, ‘அப்போ நான் வர்ரேன்..’ என்றான்.

தூரமோ, ‘என்னா தம்பி அதுக்குள்ள போறியே.. இன்னும் ஒரு பத்து பதினைந்து நாள் தங்கிட்டு போவலாமே, எனக்கு இப்படி திடுதிப்புன்னு போறது தான் மனசுக்கு பெரிய பேஜாரா இருக்கு..’ என்றான்.

‘அதுக்கென்ன வாரா வாரம் வந்து பாத்துட்டு போறேன்..’ என்றது தான் தாமதம், ‘வார நாள்ல நான் வீட்லேயே இருக்கிறதில்லை தம்பி, அதான் ஒங்களுக்கு தெரியுமே.. அப்ப சரி.. தம்பி வேலை எதுவும் அமையலன்னா ஒண்ணும் கவலைப்பட வேணாம், ஊருக்கு போற மாதிரி இருந்தா.. சொல்லிட்டு போ தம்பி.. தைல பாட்டில வூட்ல கொடுத்துடு..” என்று வழியனுப்பட்டான் அவன்.

இனி நண்பர்கள் வீடு..  ‘தம்பி ஒரு எடம் பார்த்து வச்சிருக்கிறேன்.. அங்கே தங்கிக்குங்க.. படுக்க மட்டும் தான் அங்கே.. குளிச்சி முடிச்சிட்டு இங்கே பசியாற வந்துட வேண்டியது.. ராத்திரி சாப்டுட்டு போனா போதும்’ என்றார்கள். சொன்னது போலவே தூங்க பார்த்து கொடுத்த இடம் தங்கள் நண்பர்களின் இடம் என்று பொழுதை கழித்தான்.

ஒரு வேலை இறைநாட்டப்படி கைக்கு வந்தது. தூங்க போகும் வீட்டில் தூங்க முடியாது.. ரத்தம் குடிக்கும் மூட்டை பூச்சிகள் அதிகம். வீட்டில் சுத்தம் கிடையாது. வேலை கிடைக்கும் வரை இது எதுவும் தொந்தரவாக தெரியாத அவனுக்கு இப்போது மிகப் பெரிய இடைஞ்சலாக தெரிந்தது.

வேறு ஒரு வீடு தேடினான், அலுவலகம் தூரமாக இருந்தது ஒரு காரணமாக அந்த வீட்டை பார்த்து கொடுத்த நண்பர்களிடத்தில் சொன்னான். ‘தம்பி.. நீங்க இதுவரைக்கும் தங்கியதற்கு கிட்டதட்ட மூன்று மாதமாக தங்கியதற்கு இவ்வளவு காசு கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். கொடுத்து விட்டு வெளியேறினான்.

மூன்றாம் கோணம் அல்ல… மூன்றாம் வீடு..

42 இன்ச் ஃபிளாட் ஸ்கிரீன் டிவி, நவீன வசதிகள் ஏதுமில்லா வீடு….

Advertisements