தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வருமோ!

கருணாநிதி - சோனியா - கனிமொழி

மே மாதம் தேர்தல் கூட வராதோ! இன்றைய கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் குழப்ப நிலை, அபாய கட்டத்தில் இருப்பதுபோன்ற ஒரு தோற்றம் நிலவுகிறது. தேர்தலுக்கான மெய்ன் கூட்டணிகள் இன்னும் முடிவடைந்தபாடில்லை. காங்கிரஸ் போடும் கன்டிஷன்கள் தி.மு.க.வால் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லையாம். 5 கன்டிஷன்களில் ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம், திட்டங்களை செயல்படுத்த ஒருங்கிணைந்த ஆட்சிமன்ற குழு என்பது போன்ற கன்டிஷன்கள், தொகுதி எண்ணிக்கையைவிட திணறடிக்கும் வகையில் இருக்குதாம். முரண்பாடுகள் வராதவண்ணம் கட்சித் தலைமைகள் சரி செய்தால்தான் உண்டு, என்கிறார்கள். இன்று காலையில் சோனியாகாந்தியிடம் பேச்சு வார்த்தை- விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கிடையில் தி.மு.க. தேர்தல் குழு மெம்பர்களும் தி.மு.க. தலைமையிடம் கலந்து பேசிக்கொண்டிருப்பதாகத் தகவல். ஆனால், பரவலான பேச்சு என்னன்னா இந்தக் கூட்டணி முழுமை பெறுமா என்பதுதான். இந்த சந்தேகப் பேச்சுக்கு ஆ.ராசா கைதைத் தவிர இன்னொரு ஆதாரமும் இருக்குது. டாக்டர். அன்புமணி ராமதாஸ் அமைச்சராயிருந்தபோது, எழுந்த புகாரின் அடிப்படையில்,அவருடைய பி.எஸ்.ஓ.வாக இருந்த மூர்த்தி என்பவரின் சென்னை வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியிருக்கு.பா.ம.க.வுக்கு 31 சீட் ஒதுக்கியிருக்கிற இந்தச் சமயத்தில் இப்படி நடந்திருப்பது, தி.மு.க.வுடனும், அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும்,சுமுகமான உறவை காங்கிரஸ் விரும்பவில்லையோ என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியிருக்கிறது. கூட்ட ணிப் பேச்சுவார்த்தையின்போதுகூட பா.ம.க.வுக்கு முதலில் சீட் ஒதுக்கியது பற்றி காங்கிரஸ் வருத்தம் தெரிவித்ததாகப் பேச்சு.

”கவர்னர் ஆட்சி வருமோ, என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்கும் சில ஆதாரங்கள் உண்டு. நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடர் தொடங்கிவிட்ட இந்தச் சமயத்தில் 2 கமிட்டிகளில் இருந்த மத்திய அமைச்சர்களான அழகிரி, தயாநிதிமாறன் இருவரையும் நாசுக்காக , காங்கிரஸ் கழற்றிவிட்டதாகத் தகவல். ஸ்பெக்ட்ரம் முகமூடியை மாட்டிக்கொண்டு காங்கிரஸ் பிளாக்மெயில் நடத்துவதாக தி.மு.க. நினைக்கிறது. இப்படியாக தி.மு.க.வைக் கொண்டு போய்க் கிளைமேக்ஸின் விளிம்பில் நிறுத்திவிட்டு, ‘கேட்கும் சீட்டைத் தராவிட்டால், கவர்னர் ஆட்சிதான் என்று நெருக்கடி தரப்பட இருக்கிறதாம். தி.மு.க.வின் தயவு, இனி தேவைப்படாது என்ற சூழ்நிலையில் தி.மு.க. அரசை சஸ்பென்ட் செய்துவிட்டு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வரலாம்; கைது செய்ய வேண்டியவர்கள் அனைவரையும் கைது செய்துவிட்டு, முடிந்தவரை தி.மு.க.வைப் பலவீனப்படுத்திவிட்டு, 6 மாதம் கழித்து ,தேர்தலை சாவகாசமாக சந்தித்தால் என்ன, என்று காங்கிரஸ் நினைக்கிறதாம் . இப்படியொரு ரிஸ்க் தேவையா என்றால், ரிஸ்க் எடுப்பதையே ராகுல் விரும்புகிறாராம். வழி எது வேணா இருக்கட்டும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.

காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி போன்றவர்கள், ‘ஊழல் மலிந்த தி.மு.க.வைக் கழற்றிவிடுங்கள்’ என்று காங்கிரஸை நச்சரித்து வருகிறார்களாம். தி.மு.க. அளவுக்கு முலாயம் சிங்கிடம் எம்.பி.க்கள் உள்ளனர். அவரை அனுசரித்து நடந்துகொள்ளும் மூடில் இருக்கிறதாம் காங்கிரஸ். எனவே தி.மு.க. தயவு தேவைப்படப்போவதில்லை. எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சு பாக்கவேண்டியவங்க பாப்பாங்கள்ள?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஏகப்பட்ட கோபமாம். ஈழ விவகாரம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரும் பாதகமாக அமைந்தபோது, தக்க துணையாக இருந்தது சிறுத்தைகள்தான். பல நெருக்கடிகளையும் தாண்டி கூட்டணியில் நீடித்த எங்களை அடுத்த இடத்துக்குத் தள்ளிவிட்டார்களே. 15 சீட்டுக்கு குறையக் கூடாது. குறைந்தால் அ.தி.மு.க. பக்கம் போய் விடுவோம் என்கிறார்களாம்.

பாம.க. வுக்கு 31 சீட் என்பது, ஸ்டாலின், அழகிரி உட்பட எல்லோருக்கும் வருத்தமாம். ஆனால், ராஜதந்திரியான கலைஞர் அப்படிச் செய்ததில் பல அர்த்தங்கள்! இந்தக் கணக்கை வைத்துக் கொண்டு, அங்கே அ.தி.மு.க.வுக்கு, விஜய்காந்த் கட்டாயம் அதிக தொகுதிகள் கேட்டு , மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டார். அடுத்த நாள் நிகழ இருந்த அ.தி.மு.க.- தே.மு.தி.க. உடன்பாடு தள்ளிப் போனது. இது கலைஞருக்குக் கிடைத்த வெற்றியாம். ஸீட் உடன்பாட்டை இன்னும் முடிக்காத காங்கிரஸ், தனி ரூட்டில் பா.ம.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தியதும் அவரை எரிச்சலடைய வைத்ததாம். அது மட்டுமில்லாமல், இந்த ’31’ காங்கிரசின் சீட் எண்ணிக்கையைக் குறைக்க உதவுமாம்.

சற்றுமுன் அ.தி.மு.க.- தே.மு.தி.க. விடையே பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறதாம். இது முடிந்தால்தான், ஜெ.வின் டென்ஷன் குறையுமாம். மற்ற பங்கீடுகளும் முடிவுக்கு வரும்.

**************

Advertisements