Anjali Devi

அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாஸ் வேஷம் கட்ட வேண்டிய பையன் சுகவீனம் அடைந்ததால் , 4ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அஞ்சலி தேவி பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு , தனது 9ம் வயதில் நடிப்புத் தொழிலை மேற்கொண்டார். தனது 14ம் வயதில் கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர் என்ற தகுதிகளையுடைய ஆதி நாராயண ராவ் என்பவரை மணந்தார். 18 வயதில் , 2 ஆண்குழந்தைகளுக்குத் தாயானார். கணவருடனும் 2 குழந்தைகளுடனும் ஹீரோயினாக நுழைந்த ஒரே நடிகை இவராகத்தான் இருக்கமுடியும். தன்னுடைய துறுதுறு பார்வையாலும் கொள்ளை அழகாலும், நடனத் திறமையாலும் அனைவரையும் கவர்ந்தார். தெலுங்கு, தமிழ், படங்களில் மட்டுமல்லாது, ஹிந்திப் படங்களிலும் கொடிகட்டிப் பறந்தார். முதலில் நாடகங்களிலும், நடனங்களிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தன் கணவரின் சங்கீதங்களில் மட்டுமே நடனமாடிவந்தார். புகழ் வாய்ந்த நடிகைகளான பானுமதி, புஷ்பவல்லி முதலியோரை வைத்து படம் எடுத்துவந்த, புகழ் வாய்ந்த டைரக்டரான சி.

புல்லைய்யா அஞ்சலி தேவியை வைத்துப் படம் எடுக்க விரும்பியபோது தயங்கிய இவரை உற்சாகப்படுத்தி, வலியவந்த அந்த சான்ஸை ஏற்றுக்கொள்ளவைத்தவர் இவரது கணவரே. ‘கொல்லபாமா’ என்ற இவரது முதல் படத்தைத் தொடர்ந்து தமிழ்,, தெலுங்கு, ஹிந்தி முதலிய மொழிப் படங்கள் மளமளவென குவியத் தொடங்கின. தமிழில் ‘ஆதித்தன் கனவு’, ‘மங்கையர்க்கரசி’, என்று ஆரம்பித்து எண்ணிலடங்கா படங்களில் நடித்தார். இவர் ஜோடி சேராத நடிகர்களே இல்லை என்று கூறலாம். ஹிந்தியில் திருபாய் தேசாயின் ‘ஷுக் ரம்பா’ மிகப் பெரிய வெற்றியைத் தந்தது. அஞ்சலி புரடக்ஷன்ஸின் முதல் படமான ‘பூங்கோதை’ யே, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமாம். ஆனால் ரிலீஸில் ‘பராசக்தி’ முந்திக்கொண்டதாம். நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசும்போது நெகிழ்ந்து போகிறார். ”அம்மா! என்னவொரு நடிகர், அவர்! அப்படியொரு நடிகர் கிடைப்பாரா,இனி? தமிழ் சினிமாவுக்குக் கடவுள் தந்த பரிசு, அவர்!” என்று பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார். ஹிந்தியில் அஷோக் குமார், தமிழில் எம்.ஜி.ஆர். இவர்களைப் பற்றியும் சிலாகிக்கிறார். எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த ‘சக்கரவர்த்தித் திருமகன்’ 200 நாட்களையும் தாண்டி ஓடியது. பெண்மையின் மேலான குணங்களை வெளிப்படுத்துவதாகவே, இவருடைய கேரக்டர்கள் அமையும். ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் வரும் ”அழைக்காதே” பாடலுக்கு இவர் ஆடிய நடனத்தையும் இவருடைய அழகுத் தோற்றத்தையும் இன்றளவும் மறக்காத பழைய ஜெனரேஷன் இன்னமும் உண்டு. ஹீரோயினாகக் குணச் சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு, வெரைட்டி கொடுக்கவேண்டும் என்ற ஆசையும் வந்ததாம். அதன் விளைவாக வெளிவந்ததே ‘அடுத்த வீட்டுப் பெண்’. டி.ஆர். ராமச்சந்திரன், தங்கவேலு இவர்களுடன் இவர் பண்ணிய காமெடி பிக்சர் அனைவரின் புருவத்தையும் உயரச் செய்தது. இதுவே தெலுங்கில் ‘பக்கிந்த அம்மயி’ என்று . ரீமேக் ஆனது. அக்கால ஹீரோக்கள் அத்தனை பேருடனும் நடித்தார். எம்.ஜி.ஆர்., டி.ஆர். மஹாலிங்கம்,சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், அஷோக் குமார், என். டி. ராமா ராவ் ,நாகேஸ்வர ராவ் என்று இவரது ஹீரோக்கள் பட்டியல் நீளும். ஒரு நடிகை என்பதுடன் நின்று விடாமல் பலவித பதவிகளையும் வகித்தார். ஃபில்ம் சேம்பர் ஆஃப் காமர்ஸின் வைஸ் பிரஸிடென்ட், திருப்பதி வெங்கடேஸ்வரா யுனிவர்சிடியின் செனட் மெம்பர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தன் கணவரைப் பற்றி மிகவும் பெருமைப்பட்டு க்கொள்ளும் அஞ்சலி தேவி, அவர் ஒரு புகழ்பெற்ற மியூசிக் டைரக்டர் என்று கூறுகின்றார். மிகப் பெரிய அளவில் ஹிட்டான ‘தேசுலாவுதே’, ‘அழைக்காதே’ முதலிய பாடல்களை இன்றளவும் மறக்க முடியுமா என்று வியக்கிறார். ஆம்! மறக்க முடியாதுதான்!

அஞ்சலி தேவி

லதாமங்கேஷ்கர் பாடிய ‘குஹு குஹு போலே கொய்லியா’ என்ற ஹிந்திப் பாடலுக்கு,”சிறந்த திரை விமர்சகர்” என விருது பெற்ற ஒரே தென்னிந்தியர் தன் கணவரே என்று பெருமைப்படுவதோடு, தன் கணவருக்கு ”வினோத வக்கேயகாரா”என்றும் விருது கிடைத்திருப்பதாகக் கூறுகிறார். தன் கணவரின் இசைக்கு, இளையராஜா பெரிய ரசிகர் என்று பெருமைப்படும் இவர், தங்களது ”ஆதி நாராயணா ஹிட்ஸ்” என்ற ஆல்பத்தை வெளியிடும் பொறுப்பை இளையராஜாவிடம் ஒப்படை த்திருப்பதாகக் கூறினார். ” என் கணவர் ஒரு மாமேதை” என்று கூறி தான் அவரை மிஸ் பண்ணுவதாகக் கூறும்போது ஒரு நிமிடம் முகம் வாடிப் போனார். உடனே சுதாரித்துக் கொண்டு ‘கமல், ரஜனி இருவரும் என்னுடைய புதல்வர்கள் என்கிறார். ‘அன்னை ஓர் ஆலயம்’ என்ற படத்தில் ரஜனிக்கு தாயாக நடித்ததில் சந்தோஷப்படுகிறார். கல்விக்காக வாரிக்கொடுக்கும் மனமும் உண்டு. மறைந்த நடிகர் நாகைய்யா அவர்களின் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து, ஆண்டுதோறும் 10 ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறார். தன்னுடைய கணவரின் பெயரில் இன்னொரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கவும் திட்டம் வைத்துள்ளார். நல்ல நடிகை மட்டுமல்ல ; மனித நேயம் மிக்கவராகவும் இருக்கிறார். கடைசியாக ஒரு ஹைலைட்டான விஷயம், 1946லேயே சென்னை வந்துவிட்ட நான் சென்னையைவிட்டு போக மனமில்லை. அதனால் நான் ‘சென்னை -வாசி ‘மட்டுமல்ல. ‘சென்னை- நேசி’ யும் கூட! என்று அசத்துகிறார்.

*******************

Advertisements