அலைகள் அலைகள் தாம்

அவற்றிலென்ன நிறபேதம் என்கின்றாயா ?

கேள் நண்ப..

விடியலை எழுப்பிக்

கருத்தடர்ந்த கடலுக்குள்

கட்டுமரம் தள்ளும் என் உருவம்

அலையில் வியாபித்து..

வழியனுப்ப வந்தவளுக்கு..

வெற்றாய்த் தோன்றலாம்.

தொடுவானில் தொலைவோமா

கரையேறி மீள்வோமா

என மயங்கி விரையும் எமக்கு,

அலைகளின் கருமையல்லாது

வெண்மை  நிறம் தெரியாது.

வேட்டையார்வத்தில்

வெறி கொண்டு பறக்கும் அவனுக்கோ

புள்ளிகளோடான மஞ்சளே

அலைகிழித்துத் தெரியும்.

கூட்டாளியின்

வெடித்த கதறலைப்

பார்த்த ஒருவனுக்கு..

இனி ,

கனவில் பயந்தலறும்,

காந்தல் வண்ணமே அலைகளினதும் .

தேசத்தின் வரைபடத்தில்

நெளியும் பாசியாய்,

அவற்றை..

செயற்கைக்கோள்,

பச்சையாய்ப் படம் பிடித்துக் காட்டலாம்.

அடி வானில்

குமுறிக் கொப்புளிக்கும் தீச்சிவப்பு

எம் பிள்ளைகளின் கண்களிலிருந்து கிளம்பி வந்து எரிக்கலாம் .

எமை வைத்து..

கவிதைகளும் கதைகளும் எழுதும் நீரும்,

விளையாடவும் ஓய்வுக்காவும் கடல் நாடும் பெயரும்..

மட்டும்..

அவற்றை வெள்ளையும் ஊதாவுமாய் மாறி மாறிக் காணலாம்.

..ஷஹி..

Advertisements