இது

இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!

உன் கண்கள்

அனுப்பிய கடிதங்கள்

என்னை நோக்கி

முகவரி தவறி வந்ததோ  – என்

முகத்தை நோக்கித்தான் வந்ததோ!

தெரியாத போதிலும் – அந்தக்

கடிதங்களின் மீதே – என்

விடியலின் நம்பிக்கைகள்!

காதல் என்ற

கண்ணாமூச்சி விளையாட்டில்

உன் வார்த்தைகளுக்குள்

ஒளிந்திருந்த

அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிட்டேன்!

ஆனால்

ஒளித்து வைத்தது

நீயா விதியா

என்றுதான் தெரியவில்லை!

ஆனாலும்..

உனக்குள்  ஒளிந்திருக்கும்

என்னை நீ

எப்போது கண்டுபிடிப்பாய்

என்ற

ஏக்கத்தில் நான்!

நீ

காட்டிய கரிசனங்கள்

காதலே! நட்பே! என்று

எனக்குள் நான்

எத்தனையோ

பட்டி மண்டபங்கள்

நடத்திப் பார்த்தாலும்

என் மனம் விரும்புவது

உன் மன மன்றத்தைத் தானே!

நாம்

சேர்ந்திருந்த பொழுதுகளின்

செழுமையான நினைவுகள்

கடற்கரை அலைகளாய்

என் மனகரையை முட்டி மோத

கடலான உன்னில்

கௌரவ மீனவனாய் நான்!

மீன் பிடிக்க வரவில்லை – உனில்

மூழ்குவதற்கு வந்திருக்கிறேன்!

இது இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!

..அபிமன்யு ராஜராஜன்..

Advertisements