”ஏண்ப்பா.. உனக்கு அறிவு கிறிவு ஏதாவது இருக்கா.. பட்டும் திருந்தலையே.. போயும் போயும் அவன் கூப்டான்னு அங்கே போனியே..” என்று நண்பர்களில் ஒரு சாராரும்…
“அடடா..! என்ன பெருந்தன்மை..! ஒரு கொழந்தய போல எல்லாத்தையும் மறந்துட்டு கூப்டதுக்கு மதிப்பு கொடுத்து போய்ட்டு வந்துட்டியே..” என்று நண்பர்களில் பிறிதொரு சாராரும்…
அவன் அந்நியனாக வீட்டுக்கு போய்ட்டு வந்ததை பத்தி பின்னர் கருத்து தெரிவித்தார்கள்..
இப்போது அவன் அந்நியனாக நுழைந்த போது, அந்த சந்தர்ப்பவாதி ஓடி வந்து, ‘வெல்கம் டு மை ஹோம்..’ என்று மை ஹோமை மற்றும் பல்லு தெரிக்கும் படியாக அழுத்தி உச்சரித்தார்.
வீட்டை அருமையாக வைத்திருந்தார்கள். சுற்றிப் பார்த்தான். மாஸ்டர் பெட்ரூம்.. அடுத்ததாக் இன்னொரு அறை.. லேசாக திறந்திருந்த அந்த அறையின் கதவை முற்றிலுமாய் திறந்தான். யாரோ லுங்கியோடு படுத்திருந்தார்கள். ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். இன்னொருவர் இவனை பார்த்ததும் எழுந்து வந்தார், இவன் உறங்கியவரை கைகாட்டி, ‘இவர்.. ‘ என்றான்.
‘நைட் ஷிஃப்ட்.. அதான் தூங்குறார்..’ என்றார் அவர்.
மேற்கொண்டு எதுவும் கேட்காமல் விடைபெற்று பிறந்தநாள் பையனிடம் வந்தான்..
கொண்டு வந்த பையிலிருந்து ஒரு அட்டை பெட்டியை எடுத்து ‘ஒண்ணுமில்லை.. கேக் தான் பிரிச்சு பாருங்க…’  என்றான்
பிரித்தார்கள்..
பார்த்தார்கள்…
அழகான வீடு வடிவத்தில் இருந்தது அந்த கேக்..
‘பிறந்தநாள் பரிசு..”
விருந்துக்கு பிறகு விடைபெற்றான்.
இவனுக்கு நண்பர்களுக்கு பஞ்சமே இருக்காது போலும்.
இன்னொரு நண்பருடன் சேர்ந்து ஒரு வீடு பிடித்து தங்கியிருந்தான். இது நான்காவது வீடு.. (ஏமாந்த வீட்டை சேர்க்காமல்)
வேலையிடத்திற்கும் தங்கியிருந்த இடத்திற்கும் ரொம்ப தூரம்..
நண்பர் மனைவியோடு தங்கியிருந்தார்.. அவருக்கு இரண்டு வயது பையன் ஒருவன் இருந்தான்.
திடீரென்று ஒரு நாள் அவரது மனைவிக்கு கடுமையான காய்ச்சல். வேலையிலிருந்து பாதியிலேயே ஓடி வந்த அவர் மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.
அவர்கள் மருந்து மாத்திரை கொடுத்து அனுப்பினார்கள்.
இரண்டு நாள் பக்கத்திலேயே இருந்து கவனித்துக் கொண்டார்.
அவர்களின் நிலை இன்னமும் சரி வரவில்லை.
இவருக்கு விடுமுறையும் இல்லை.
இவன் சொன்னான், ‘எனக்கு ஒரு லீவு இந்த மாசத்துக்குள்ளே எடுத்தாகணும்.. நான் வேணா எடுத்து கவனிச்சுக்குறேன். நீங்க வேலைக்கு போய்ட்டு வாங்களேன்..’ என்று
அவர் நன்றியை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று வார்த்தைகளில் சொன்னார்.
அவரின் மனைவி படுத்த படுக்கை..
இவன் கஞ்சி வைத்தான்..
அவரின் இரண்டு வயது மகன் படுக்கை அறையிலேயே கக்கா போனான்..
இவன் கக்கா வந்த இடத்தையும் கக்கா போன இடத்தையுமே கழுவி விட்டான்.
அவரின் மனைவிக்கு மாத்திரை எடுத்து வைத்தான்
அவரின குழந்தைக்கு உணவு ஊட்டி விட்டான்
தனது கணவர் வீட்டிற்கு வந்ததும் எல்லாவற்றையும் சொல்லி காண்பித்தார்கள்.
கணவரான அவர் கண் கலங்கி இவன் கையை பிடித்து முத்தமிட்டார்.
அந்த வீடு மிகவும் தொலைவாக உள்ளது என்று வேலையிடத்திற்கு ஐந்து நிமிட நடை தூரமே உள்ள ஒரு இடத்தை பிடித்து ஆறாவது வீட்டிற்குள் அடைக்கலமானார்கள்.
கிட்டதட்ட மூன்றாண்டுகள் அதே வீட்டில் இருவரும் தங்கியிருந்தார்கள்.
வீட்டின் ஓனர் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளலாம். வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறவும்..
வேறு வீடு தேடும் படலம் மீண்டும் ஆரம்பமானது..
ஒரு அருமையான வீடு கண்களில் சிக்கியது. அந்த வீட்டை எடுப்பதென முடிவாகி ஒப்பந்தமும் செய்தாகி விட்டது,
நண்பரான அவரிடம் நிறைய பேர் வந்து ‘நானும் உங்களோடு தங்கிக் கொள்கிறேன்.. எவ்வளவு வாடகை சொல்கிறீர்களோ மறு பேச்சு பேசாமல் கொடுக்கிறேன்.. ‘ என்று சொல்லவும் இவர் ரொம்பவும் யோசனையாக இருந்தார்.
யோசனைகளின் முடிவாக என்னிடம் வந்து இப்படி சொன்னார், ‘நீ வேற எங்கேயாவது தங்கிக்க முடியுமா..?’ என்று
அவரின் யோசனை அவரிடம் தங்குவதற்கு இடம் கேட்டவர்களை தங்க வைத்துக் கொண்டு மொத்த வாடகை காசையும் அவர்களிடமே வாங்கி கொடுத்து விட்டு சேமிக்கலாம் என்பதால் தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டான்.
கடுங்கோபமாக வந்தது. அந்த கோபத்திலேயே பதிலும் சொன்னான், ‘முடியும்..’ என்று
ஆனால் ‘முடியும்..’ என்று சொன்ன தேதியிலிருந்து மூன்றாவது நாளில் இருக்கும் இந்த வீட்டை அத்தனை சாமான்களோடு காலி செய்தாக வேண்டும்.
….நாகூர் இஸ்மாயில்…
Advertisements