தொலைபேசி எண்கள் சுழற்றப்பட்டது.
ஒலி ஒலித்து நின்றவுடன், ‘ஹலோ’ என்றான் இவன்.
‘ஹலோ.. ஏன்ப்பா என்னா செய்தி..’ – மறுமுனையிலிருந்து குரல்.
‘ஒரு வீடு வேணும்.. கொஞ்சம் அவசரம்..’ இவன் கரகரத்தான்.
‘பார்க்கலாமே.. இரண்டு வாரம் டைம் குடு.. நானே கால் பண்றேன்.. நோ வொர்ரிஸ்..” தைரியமான குரல்.
‘இரண்டு வாரம்லாம் கிடையாது.. இன்னும் ரெண்டு நாளுக்குள்ளே சொல்லணும்..”
“….” தைரியம் புஸ்வானம்
“ஹலோ.. இக்கிறீயா..? இல்லையா?” – பரபரத்தான் இவன்
“என்னாது… ரெண்டு நாள்லயா? என்னா வெளையாட்டா…? வீடை கைலேயே கட்டிகிட்டு அலைறவனால கூட இது முடியாது.. தெரியும்ல..” விளக்க முயன்றது மறுமுனை குரல்
‘எந் நிலைமை அப்படிப்பா… “ இவன்
“அப்படி என்னா நெலம.. இப்ப தங்கிட்டிருக்கிற வீடு என்னாச்சு..” விளக்கம் கேட்டது ம.கு.
“இப்ப இக்கிற வீடு காண்ட்ராக்ட் முடியுது. இப்ப இக்கிற எல்லோரும் சேர்ந்து புது வீட்ல தங்குறதா தான் பிளேன்.. புது வீடும் பார்த்தாச்சு.. ஆனா.. எவர் அந்த வீட்டுக்கு கையெழுத்து போட்டாரோ அவருக்கு புது யோசனை வந்திருக்கு..” சுருக்கமாக புரிய வைக்க முற்பட்டான் இவன்
“அப்படி என்னாப்பா யோசனை..?” ஆர்வமானது ம.கு.
“நானும் அவங்களோட தங்குனேன்னு வை.. வாடகைன்னு மொத்தமா பிரிச்சு என் பங்குக்கு நான் எவ்ளோ கொடுக்கணுமோ.. அதை விட ரெண்டு மடங்கு வேற ஆளுங்கள அந்த வீட்ல தங்க வச்சா அந்த கையெழுத்து போட்டவருக்கு கெடைக்கும்.. அதான் என்ன வேற வீட்ட பார்த்துக்க சொல்லிட்டாரு..”
”எல்லாம் சரி தான்.. காசுக்கு பீ திங்காதவன் எவன்.. ? ஆனா எப்போ சொல்றதுண்டு இல்லையா..?” கடுப்பானது ம.கு.
“அதெல்லாம் எனக்கு இப்போ முக்கியம் இல்லை.. சொல்லியாச்சு.. இப்போ எனக்கு உடனடியா ஒரு வீடு வேணும்.. அதுவும் ஒன் மூலமா தான் முடியணும்..” கட் அண்ட் ரைட்டாக சொன்னான் இவன்
“நாளைக்கு சொல்றேன்.. கொஞ்சம் வேலை இருக்கு.. ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்.. பார்க்கலாம்.. ஆண்டவன் இக்கிறான்..”
தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அடுத்த நாள் அழைப்பு வரும் என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றம்..
இவன் தொடர்பு கொண்டான்
தொலைபேசி காலமாகி இருந்தது.
நாளை சாயங்காலம் வீட்டை காலி செய்தாக வேண்டும்.
இன்றைய இரவு..
நிமிடத்திற்கு ஒரு முறை படுக்கையிலிருந்து எந்திரிப்பதும் படுப்பதுமாக இருந்தான்.
ஒருமனம் ”திரும்ப போய் அந்த நண்பரிடமே, ‘வீடு எதுவும் கிடைக்கவில்லை.. கொஞ்ச நாள் வரை இருந்து விட்டு அப்புறம் வேறு வீடு கிடைத்தவுடன் மாறி போயிடறேன்.. என்று போய் கேளு… ஒண்ணும் தப்பில்லை.. நம்ம வேலைக்கு நம்ம தான் எறங்கி வரணும்.. போ.. “ என்று கழுத்தை பிடித்து தள்ளியது.
இன்னொரு மனம் ”அவர் வேறு வீட்டை பார்த்துக்கன்னு சொன்னதுலேந்து ஒன்கிட்டே மொகமே கொடுக்கலை.. ஒரு வார்த்தை கூட பேசவும் இல்லை.. அவர் கிட்டே போய் கெஞ்சுறதாவது.. சரி போய் கேட்டு… இப்ப அதுலாம் முடியாதுண்ணுட்டார்ன்னு வை.. என்னா செய்வே?.. அப்டி சொல்லிட்டதாவே நெனைச்சுக்க..” என்று நெஞ்சை பிடித்து நிறுத்தியது.
பத்து தடவை ஒண்ணுக்கு வருவது போல் இருந்தது..
பதினோரு தடவை ரெண்டுக்கு வருவது போல் இருந்தது..
இந்த குழப்பமான நடுநிசியில் …
தூரத்து
வான கூரையில்
மேகங்கள்
வீட்டை அமைக்க
நட்சத்திரங்கள்
விளக்காய் எறிய
நிலவு
மனிதனாய் – அவனாகவே
தெரிந்தது
அவனுக்கு…
விடியலின் காற்று மேகத்தோடு கற்பனையையும் கலைக்க கலக்கமானான் இவன்.
இன்று காலி செய்தாக வேண்டும்..
இறுகிய முகத்தோடு இவன்.
தொலைபேசி ஒலி
இறைவனின் குரலில் ஒலித்தது.
நண்பண்டா தான் பேசினான்..
“சாரி மாப்ளே.. பக்கத்துக்கு நாட்டுக்கு போயிட்டேன்.. அதான் பேசவே முடியலை.. வீடு விஷயம் சொல்றதுக்கு தான் அடிச்சேன்.. சாயங்காலம் வண்டி வரும்.. ஒரு வீடு சொல்லிட்டேன்.. ஆனாக்கா இன்னும் ஓனர் சம்மதிக்கலை.. இன்னைக்கி ராத்திரி தான் சொல்றேண்டு சொல்லியிருக்கிறாரு.. ஆனா நாம எல்லா சாமான்வொலயும் எடுத்துக்கிட்டு போயிடலாம்.. நான் பேசிக்கிறேன்.. நான் சரியா 6 மணிக்கெல்லாம் வந்துடறேன்..”
சரியாக ஆறு மணி..
சொன்ன சொல் மாறவில்லை..
வண்டி வந்தது..
மறுமுனை குரலுக்குறியவர் (ம.கு.) வியர்த்து விறுவிறுத்துப் போய் வந்திறங்கினார்.
ஏராளமான சாமான்கள். சொந்த வீட்டில் இருப்பது போல் இவ்வளவு சாமான்கள் வாங்கி குவித்திருக்க தேவையில்லை. வாடகை வீட்டில் இருந்தால் வீடு மாறும் போது பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கும்..
இதெல்லாம் இப்போது தான் உரைத்தது இவனுக்கு..
வாங்கும் போது தெரியவில்லை..
ஒரு வழியா சாமான்கள் வண்டியில் ஏற்றி குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தால்..
வீடு பூட்டியிருந்தது..
வாசலிலேயே அவ்வளவு சாமான்களையும் போட்டு நிரப்பியிருந்தனர்.
“ஒனர் வந்து பார்த்து ’இவ்வளவு சாமானா?’ண்டு வெறுத்து போயிடப் போறாருப்பா..” என்றான்.
எந்த வீட்டு ஒனர்களுக்கு குடியிருப்பவர்களின் சாமான்கள் இடத்தை அடைப்பது பிடிக்காது.
“பொறு.. பார்க்கலாம்..” என்றார் ம.கு.நண்பரண்டா.
இது புகுந்த வீட்டு கணக்குப் படி ஏழாவது வீடாகுமோ..
கிடைக்காத வீட்டு கணக்குப் படி மூன்றாவது வீடாகுமோ..
தெரியவில்லை..
பொறுத்திருப்போம்.
வீட்டு ஒனர் வந்தால் தெரிந்து விடப் போகிறது..
இருவரும் சாமான் சட்டிகளோடு காத்திருந்தார்கள்….

(தொடரும்)

Advertisements