அல்லாஹ் அன்பானவன் என்பதை நாம் உணர்ந்துக் கொள்ளவே இந்த உலகில் மனிதர்களிடையே பாசத்தை அல்லாஹ் வைத்தான் என்று நான் நம்புவதுண்டு. பஞ்சமே இல்லாத பாசத்தை நான் என் பாட்டியா பொன்னாச்சிம்மாவிடம் கண்டதுமுண்டு.
சிரித்த முகம், செழித்த குரல், தயாள குணம், கண்ணிய மொழிகள், கனிவான பார்வை இவை யாவும் எங்கள் பொன்னாச்சிம்மாவின் அடையாளங்கள்.
காலையில் நாங்கள் எழுந்தவுடன் அவர்களது கட்டில் அருகே வந்து அமர்ந்து விடுவோம். எங்களுக்குள் பொன்னாச்சிம்மாவின் அருகே யார் அமர்வது என்று இடம் பிடிப்பதில் பெரும் போட்டியே நடக்கும்.
பாட்டனார் சேத்தப்பா எதிரே சாமா நாற்காலியில்(சாய்வதற்கு வசதியாக உள்ள நாற்காலி) உட்கார்ந்து இருப்பார்கள்.
எப்போதும் கூட்டம் தான். எந்நேரமும் சிரிப்பலை தான். அங்கு உட்கார்ந்து தான் தேத்தணி குடிப்போம்…
10 அல்லது 10 1/2மணிக்கு தெரு முனை தேரடியில் தஸ்தகீர் பாய் கடைக்கு போய் யாராவது தேத்தணி வாங்கி வர வேண்டும்.. கடையில் வேலை பார்க்கும் ஹாஜா என்பவர் போடும் டீ பொன்னாச்சிம்மாவிற்கு ரொம்ப பிடிக்கும்…
சில சமயம் தேத்தணி ‘வாய்ல வக்க முடியலை’ என்று தேத்தணி போட்டவரோடு தேத்தணி வாங்கி வந்தவரும் வாங்கி கட்டிக்க வேண்டும் என்பது வேதனை அல்ல வேடிக்கை..
பொன்னாச்சிம்மாவிற்கு அவர்களது முறை மச்சானை நிச்சயித்து இருந்தார்கள், னால் பொன்னாச்சிம்மாவோ ‘நான் சேத்தப்பாவை தான் விரும்புகிறேன்’ என்று கூறி அவர்களையே நிகாஹ் செய்து கொண்டார்கள்.
சேத்தப்பா ஏதாவது விசேஷத்திற்கு செல்லும் போது காசு கொடுக்க வேண்டி ஒரு தொகையை எடுத்து கையில் வைத்துக் பொத்திக் கொண்டு ‘எவ்வளவு கொடுக்கலாம்?’ என்பார்கள்.
பொன்னாச்சிம்மா ஒரு தொகை சொல்வார்கள், சேத்தப்பா கையை திறந்து காட்டுவார்கள்- என்ன ச்சரியம்! அவர்கள் சொன்ன அதே தொகை தான் இருக்கும்.
எங்களது பாட்டியாவிற்கு மொத்தம் 5 பிள்ளைகள்.  சேத்தப்பாவின் தங்கை ஆச்சிமாவின் 3 மகனை தனது 3 மகளுக்கும், முறையே பெரியாப்பாவை ஆணிமாவிற்கும், வாப்பாவை ம்மாவிற்கும், வஹ்ஹாப் சின்னாப்பவை பவுன்மாவிற்கும், ஆச்சிமாவின் இரு மகள்களில் ஒரு மகளான சேத்தமாமியை தனது  மூத்த பிள்ளை  சேத்த மாமாவிற்கும் மணமுடித்து வைத்தார்கள். செல்ல மாமாவிற்கும் மனைவி பொறத்தி(பிறத்தியார்) கிடையாது தனது நானா மகளான செல்ல மாமிக்கு மணமுடித்து வைத்தார்கள்.
இதில் சேத்த மாமா, செல்ல மாமா பேங்காக் சபராளி. பெரியாப்பாவும் பேங்காக் சபராளி தான்.
வஹ்ஹாப் சின்னாப்பா சவுதி போய் ஒன் வேயில் வந்துவிட்டார்கள். வஹ்ஹாப் சின்னாப்பாவால் தான் எங்கள் வீட்டுக்கு டிவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்க வாப்பா நாகப்பட்டினத்தில் வேலை பார்த்து வந்தார்கள். கொடுத்து வைத்தவர்.. எப்போதும் ஊரிலேயே இருக்கலாம்.. நல்லது கெட்டதில் கலந்துக்கலாம்..
பொன்னாச்சிம்மாவின் 3 பெண் பிள்ளைகள் மற்றும் அவர்களது  பிள்ளைகள் நாங்கள் யாவரும் மியா தெருவில் ஒரு பெரிய வீட்டில் வசித்து வந்தோம். குழையாத கூட்டாக இணைந்து நின்றோம்,  கூட்டம் கூட்டமாக வாழ்ந்து மகிழ்ந்தோம்.
சோகங்களுக்கு இடமுண்டோ சொந்தங்கள் சேர்ந்திருந்தால்? தினந்தோறும் விருந்துக்கு சமைப்பது போல் சமையல் வேலை நடக்கும். அது ஆணிமா டிபார்ட்மெண்ட்..அவர்களும் பாத்திமா பீயும் சேர்ந்து சமைப்பதை தான் நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என்பது விதி. நல்ல விதி தான்.
நாகூர் ஹந்திரி என்ற சிறப்பான விழா வந்து விட்டால் போதும் சென்னையை அடுத்த பழவேற்காட்டிலிருந்து ஹஜ்ஜாபி, யூசுப் நானா குடும்பம் வந்து விடுவார்கள், அவர்களுக்கும் சேர்த்து சமைக்கணும், வீடு கலை கட்டி விடும்.
முன்பெல்லாம் அபாய் அப்பா(சேத்தப்பாவின் தம்பி) பேங்காக்கில் இருந்து ஹந்திரிக்கு வந்து விடுவார்கள்.
அபாய் அப்பா பொன்னாச்சிமாவை ‘பூச்சி’ என்று தான் அழைப்பார்கள்.. பூச்சி என்றால் மச்சி என்று அர்த்தமாம்..
எங்க வீட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்..சொல்லவே வேண்டாம்.ஹந்திரி எங்க வீட்டில் தான் என்றால் அது மிகையில்லை.
எல்லோருக்கும்  ஆணிமா தான் சமைக்க வேண்டும்.அவர்களது பாடு திண்டாட்டம் தான்.னால் உண்மையில் அவர்களுக்கு அது கொண்டாட்டம் தான்.
ஒரு ஆளுக்கு ஒரு வேலை. எங்க ம்மா தான் துணியெல்லாம் துவைப்பார்கள்.. இப்படியாக.. ஆனால்..குறையெல்லாம் வந்ததில்லை ‘இஹ ஒரு வேலை கூட செய்ததில்லை’ என்று.. அது தான் ஹந்திரி போல் பெரிய விஷேசம்.
வருஷத்தில் ஒரு முறை மெளலுது, பூரியான் பாத்திஹாவெல்லாம் வரும்..அது இன்னும் விஷேசமா இருக்கும்.. காலையிலேயே ஆயா, ஐசா லாத்தா, அம்மாஜி என்று எல்லோரும் வந்து விடுவார்கள்..
பொன்னாச்சிம்மாவின் மறைவிற்கு பிறகு வீட்டிற்கு அன்றாடம் வந்து சமையல் வேலை என்று அநேக வேலை செய்த ஆயா அவர்கள் இப்படி சொன்னார்கள்.. ‘பொன்னாச்சிட புள்ளைங்க துயரத்தில் இருக்கும் போது என்னால சும்மா வூட்டுல உட்கார்ந்துகுட்டு இருக்க முடியாது’ என்று..
காசுக்கு வந்த வார்த்தை அல்ல அது.. காட்டிய அன்புக்கு கைம்மாறே அது..
எங்க வீட்டு வாசலிலும் அழைப்பு மணி இருக்கும் ஆனால் சற்று வித்தியாசமாக..வீட்டு உள்ளேயிருந்து பில் அழுத்தினால் வாசலில் கேட்கும். நாங்கள் இரவு 8 மணிக்கு மேலே வாசலில் இருக்க கூடாதாம்.. அதற்காக இந்த ஏற்பாடு..
பொன்னாச்சிமா நிழலை கூட நிஜம் என்று நம்பும் குணமுடையவர்.. சினிமா நடிகர் நிழல்கள் ரவியையும் அப்படித்தான் நம்பினார்…ஒரு முறை நானும் என் தம்பி தாஜும் ‘இரயில் சிநேகம்’ என்ற தொலைக்காட்சி படம் பார்த்தோம்..நிழல்கள் ரவி கதாநாயகனாக மிகவும் நல்லவராக நடித்த டிவி நாடகம் அது, அடுத்த நாள் ‘சிகரம்’ என்ற படம் பார்தோம்.. இந்த படத்தில் நிழல்கள் ரவி கெட்டவராக நடித்து இருந்தார். இரண்டு படங்களையும் பார்த்த பொன்னாச்சிமா இரண்டாவது நாள் சொன்னார்கள் “ரவி நேத்து நல்லவரா இருந்தாரேம்மா” என்று..
நாங்கள் ஏதாவது விஷமம் செய்து விடுவோம்..உடனே எங்க ம்மா அடிக்க வருவார்கள்.. பொன்னாச்சிம்மா தடுத்து ‘இன்னைக்கு வெள்ளிக் கிழமை, இன்னைக்கு ஒரு மாப்பு’ என்பார்கள். எங்க ம்மா ‘உங்களாலே தான் புள்ளைங்க கெட்டு போவதே’ என்பார்கள். நான் சொல்வேன், ‘அஹலாலே தான்ம்மா இப்படி நல்லா இருக்கிறோம்’ என்று உண்மையை சொல்வேன். எங்க ம்மா அதையே திரும்ப திரும்ப கேட்பார்கள். ‘அன்னக்கி என்னா சொன்னா?, அன்னக்கி என்னா சொன்னா?’ என்று..
ஒரு முறை சேத்தப்பா வெளியே செல்ல நினைத்த போது அவர்கள் அணிய நினைத்த சட்டை இன்னமும் துவைக்காமல் இருந்தது. சேத்தப்பா கோபப்பட்டார்கள்.. எங்க ம்மா சமாதானப்படுத்தி சேத்தப்பாவிடம்.. ‘நான் பந்தயம் கட்டுறேன். நீங்க ரெடியாவுரதுக்குல்லே நான் துவைத்து காய வைத்து அயர்ன் பண்ணி தந்து விடுகிறேன்’ என்று சொல்ல..
எங்க அறையில் அதற்கான அலுவலில் இருந்த போது எங்க ம்மா என்னிடம் இந்த விஷயத்தை சொன்னார்கள். ‘நான் வாப்பாக்காக சீக்கிரம் வேலையை முடிக்கிறேன்’ என்றார்கள்.
எங்க ம்மா வேலையை சீக்கிரம் முடித்தால் சேத்தப்பா அல்லவா தோற்று விடுவார்கள், அதனால் நான் சொன்னேன் ‘சேத்தப்பால்லம்மா ஜெயிக்கணும்’ என்று.
இதை பொன்னாச்சிம்மா நடுக்கட்டில் இருந்து கேட்டு விட்டார்கள். ‘என் புள்ள சேத்தப்பா அந்த இடத்துல இல்லாதப்போ சேத்தப்பால்ல ஜெயிக்கணும் எண்றானே’ என்று என்னை பற்றி பெருமிதம் கொண்டாலும் அவர்களுக்கு என்னை விட என் தம்பி தாஜ் மீது தான் பாசம் அதிகம்.
நான் அவர்களிடமே இதை சொல்லி சில சமயம் ஏச்சும் சில சமயம் சிரிப்பும் பதிலாக பெற்றதுண்டு.. பொன்னாச்சிம்மா சொல்வார்கள் ‘தாஜ் எதுவுமே சாப்பிட மாட்டேங்கிறான் அதனாலே தான்’ என்று..
பொன்னாச்சிம்மாக்கு..
பிடித்த பேரன் என்றால் அது பவுன்மா மகன் கபீர், செல்ல மாமா மகன் கண்ணுவாப்பா.
பிடித்த பேத்தி என்றால் அது ணிமா மகள் சேச்சி..
அப்பப்பா.. சேச்சிக்கு பொன்னாச்சிம்மா மேல் தான் என்ன பாசம்.. சேச்சி பொன்னாச்சிம்மாவிற்கு படுக்க பாய் போடுவார்கள் பாருங்கள்.. சுபுஹானல்லாஹ்.. பெறுக்கி விடுறது என்ன? ஓதி ஊதுறது என்ன? லிம்ஷா கூட அப்படி ஓதி ஊத மாட்டாஹா.. போங்க..
பவுன்மா மகள் ஆயிஷா, ணிமா மகள் முத்தா, சேத்த மாமா மகள் •பரிதா, ஜா•பர், பல்கிஸ்(என்னோட மனைவி), அன்சாரி, செல்ல மாமா மகன் ராஜா(இவர் முத்தாவை திருமணம் செய்துள்ளார்), மகள் ஆபிதா என்று எல்லோர் மீதும் அன்பு பாராட்டுவார்கள்..
ஆயிஷாவை ‘கலவடை கச்சிமா, சப்பை சகுந்தலை’ என்றெல்லாம் அவர்கள் அழைப்பது நகைச்சுவை..
நாங்கள் பெரும்பாலும் சொந்தத்துக்குள்ளேயே தான் நிகாஹ் செய்து கொள்வோம். அதுவும் சின்ன வயதிலேயே இன்னாருக்கு இன்னார் என்று பேசி வைத்து விடுவார்கள்.
எனக்கெல்லாம் கூட அப்படி தான் நிகாஹ் நடந்தது. இப்பொழுது கூட சேத்தமாமா மகன் அன்சாரியை ஆயிஷாவிற்கு பேசி வைத்துள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.
பொன்னாச்சிம்மா ஏழை வீட்டு மய்யித்தானாலும் சரி கல்யாணமானாலும் சரி எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள்.
எங்க குடும்பத்திற்கும் தாய்லாந்து நாட்டிற்கும் உறவு பாலமே உள்ளது. பேங்காக்கிலிருந்து பார்சலில் சேத்தமாமாவிடமிருந்து பொன்னாச்சிம்மாவிற்கு நிறைய சாமான்கள் வரும்.. பேங்காக்கிலிருந்து சேத்தப்பாவின் தாயாரான யாயிச்சாவிடமிருந்தும், சேத்தப்பாவின் தங்கையும் பொன்னாச்சிம்மாவுடைய வாப்பாவின் 2வது மனைவியுமான மாமிச்சாவிடமிருந்தும் நோன்புக்கு எப்பவாவது காசும் வரும்,பெரியாப்பாவின் சம்பாத்யமும் பொன்னாச்சிம்மா குடும்பத்தை நடத்த பெரிதும் உதவியாக இருந்தது.
யார் குடும்பத்திற்கு அதிகம் செய்தார்கள் என்ற கணக்கு இல்லை.. எல்லோரும் இயன்றதை செய்தார்கள்..
சுருங்க சொன்னால் குடும்பத்தில் எல்லோரும் பொன்னாச்சிம்மா மீது உயிரையே வைத்து இருந்தோம். அவர்களும் தனது பிள்ளைகள் மீது அளவு கடந்த பாச மழை பொழிந்தார்கள்.
நாங்கள் உயிரே வைத்து இருந்த பொன்னாச்சிம்மா தன் உயிரை விடும் காலமும் எங்கள் மீது கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் அல்லாஹ்வின் கட்டளைக்கு பணிந்து வந்தது.
ஆமாம்.. எங்கள் குடும்ப விளக்கு தன் அற்புத வாழ்நாளின் இறுதி பகுதிக்கு வந்து விட்டது..
ஆமாம்?!.. இந்த மரணம் வரத்தான் வேண்டுமா? மரணம் என்றுமே மரணிப்பதில்லையா?..  வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் மண்னில் இடமேது என்று பாடுகிறீர்களா?  அப்பவும் எனக்கு மரணத்தில் உடன்பாடு இல்லை.. எல்லோரும் தங்க பூமியை விசாலமாக்கினால் என்ன என்று தான் தோன்றுகிறது.
இப்பொழுது
உதாரணத்திற்கு இன்னொரு மியா தெரு கூட வரலாம்,
மியா தெரு A, மியா தெரு B என்று கூட வந்து இந்த பூமி விசாலமாகினால் என்ன என்று பைத்தியக்கார்த்தனமாக தோன்றுகிறது.
பொன்னாச்சிம்மாவிற்கு நாளுக்கு நாள் உடல் நலம் குறைந்துக் கொண்டே வந்தது..விடிய விடிய தூங்க மாட்டோம்..எப்போதும் வலி..உடல் முழுக்க பாழாய்ப்போன வலி.. வலி குறைய
எல்லோரும் முதுகு அமுக்கி விடுவோம்.. கபீர் தான் அன்றாடம் முதுகு அமுக்கி விடுவான்.. வலி அதிகமாகவே நாகப்பட்டினத்தில் ஸ்பத்திரியில் காட்டி வந்தோம்..
பொன்னாச்சிம்மாவிடம் கேட்டேன், வலி குறைந்ததா? என்று ..அவர்கள் உதாரணத்துடன் சொன்னார்கள்..1000ரூபாயில் 1காசு குறைந்தால் எப்படி இருக்கும்..அது போல் குறைந்துள்ளது என்று..
எதுவும் சரி வராமல் போகவே இப்போது மீண்டும் நாகை ஸ்பத்திரியில் பொன்னாச்சிம்மா உள் நோயாளியாக அனுமதிக்கப் பட்டார்கள்..
பொன்னாச்சிம்மா ‘காத்து பத்தலை’ என்று கூற ஹலிமா மாமி(என் வாப்பாவின் தங்கை) அவர்களது வீட்டிலிருந்து டேப் ரிக்கார்டரோடு கூடிய ஒரு •பேன் கொண்டு வந்து கொடுத்தார்கள்..
ஒரு வாரம் கழிந்தது..திடீரென்று ஒரு காலை..ஹலிமா மாமி வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு திரும்பியபோது.. பொன்னாச்சிம்மாவிற்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது..
எங்க வாப்பாவிடம் டாக்டர் சொன்னார்.. ‘தஞ்சாவூர் கூட்டிட்டு போயிடுங்க னாலும் சிரமம் தான்’ என்றார்…
என் மூச்சு நிற்க பார்த்தது..அது வரை நான் நம்பவில்லை.. மரணம் பற்றி நினைக்கவுமில்லை.. பொன்னாச்சிம்மா எப்படியும் பொழைச்சுக்குவாஹா என்று தான் எண்ணினேன்..
அவர்களது அறைக்கு ஓடி வந்தேன், எங்க ம்மா அழுது புலம்பியவாறே சுவரோரமாக நின்று கொண்டு இருந்தார்கள்.
பொன்னாச்சிம்மா அழுதவாறே.. ‘என்னை இங்கேயே மெளத்தா போவ சொல்றீங்களா..இல்லை இஹலை(சேத்தப்பவை) பார்க்க ஊட்டுக்கு கூட்டிட்டு போக போறீங்களா?’ என்றார்கள்..
நான் கிட்டே போய் ‘எங்களை தனியா விட்டுடாதீங்க பொன்னாச்சிம்மா’ என்றேன்…என்னை, ‘இங்கே வா’ என்று கூப்பிட்டு நெற்றியில் முத்தமிட்டு ‘ராவும் பகலும் கஷ்டப்பட்டியே’ என்றார்கள்..
யா அல்லாஹ் நான் என்ன செய்வேன்..எனக்கு நெஞ்செல்லாம் படபடத்தது..என் கண்களில் பழைய நினைவலைகள் காட்சிகளாக சங்கமித்தன..
ஒரு நாள் காலை, சேத்தப்பா அறையில் வழுக்கி விழுந்து விட்டார்கள்.. பொன்னாச்சிம்மா பொறுமையாக ‘வாப்பா விழுந்துட்டாஹா.. பாருங்க..’ என்றார்கள்..
டாக்டர் ஒருவர் ‘ஒண்ணுமில்லை..’ என்று மருந்து மாத்திரை எழுதி கொடுத்தார்.. ஒரு வாரம்..ஒரு பலனும் இல்லை..
எதிர் வீட்டு அதாவது யாவன்னா வீட்டு பஹ்ருதீன், பஸ் டிரைவர் ஜான் எல்லோரும் எலும்பு டாக்டர் கண்ணன் என்பவரிடம் காட்ட சொல்லி வற்புறுத்தி ஓர் இரவு அவர்களது காரிலேயே அழைத்தும் வந்தார்கள்..
டாக்டர் கண்ணன் வந்து சேத்தப்பாவை பார்த்து ‘எலும்பு முறிந்துள்ளது..’ என்று சொன்னார்.
நாளை காடம்பாடி அரேப்ஷா தக்கா அருகே ஹபீப் மருத்துவமனையில் சேத்தப்பா அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் முடிவாயிற்று..
டாக்டர் கண்ணன் அங்கு வந்து பார்ப்பது என்றும் மாவு கட்டு போட்டு பல நாட்கள் அங்கேயே இருக்க வேண்டுமென்றும் கூறப்பட்டது இல்லை என்றால் ஆபரேஷன் பண்ணனும் என்றும் ‘அது வேண்டாம்’ என்றும் முடிவானது..
என் மாமியார் சேத்த மாமி, வஹ்ஹாப் சின்னாப்பா எல்லோரும் காலை முதல் இரவு வரை கவனித்து கொள்வார்கள்.. மூத்திரம் பேய வைப்பது, கழிவுகள் வெளியாகினால் கழுவி சுத்தம் செய்வது என்று..
சொந்தம் என்றால் சொர்க்கம் என்று பொருளோ?.. ஆனால்..சேத்த மாமியும், வஹ்ஹாப் சின்னாப்பாவும் செய்த பணிவிடைக்கு சொர்க்கத்தை பொருளாக கொடுத்தாலும் முழு வெகுமதி கொடுத்ததாய் பொருள்படாது..
இரவில் எங்க வாப்பா.. காலையில் வேலை பார்த்து கலைத்து போய் தூங்குவார்கள்..சேத்தப்பாக்கு ஒன்னுக்கு வந்தால் வெடுக்கென்று எழுந்து வைப்பார்கள்..
எவ்வளவு பாடு..என்ன கஷ்டம்..னால் எதுவும் எங்க குடும்ப உறுப்பினர்களுக்கு கஷ்டமாகவே தெறியவில்லை..சீதேவியான குடும்பம் எங்க குடும்பம்..
அது மட்டுமல்ல எங்கள் அருமை பொன்னாச்சிம்மா இருந்தது எங்களுக்கு ஒரு தைரியம் என்று நான் சொன்னால் அது உவமை அல்ல.. உண்மையே அது தான்..
எல்லோரும் கஷ்டத்திலும் ஒன்றாக இருந்தோம்..சேத்தப்பா விஷயத்தில் வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்த கார் டிரைவர், பண்டாரி சுபஹான் பாய் பேரன் ஜாகீர், கூடவே தங்கியிருந்த ரஹ்மத் கனி, அஹ பேரன் காத்தாடி உள்ளே விரலை விட்ட முஸ்தபா மகன், துடித்து போன சேக் உள்பட எல்லோருமே கனிவுடன் உதவினார்கள்..
இடையில் வந்த இடையூறு எங்கள் இடைவேளை இல்லாத பாசத்தால் தலைதெறிக்க ஓடியது..
டாக்டர் கண்ணன் ஜட்ஜ் அப்பாவிடம்(பொன்னாச்சிம்மாவிற்கு மச்சான் முறை வேண்டும்..சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதியுமாவார்) சொன்னார்.. ‘இவர்கள்  பெரியவங்களை ஒரு பூ மாதிரி பார்த்துக் கொண்டார்கள்’ என்று…
என் நினைவலைகள் முட்டி மோதி பொன்னாச்சிம்மாவிடமே திரும்பி வந்தது..
டாக்டர் கண்ணன் அப்போ சொன்ன மாதிரி.. பொன்னாச்சிம்மா உங்களையும் ஒரு பூ மாதிரி பார்த்துக்குறோம் என்று என் மனம் தவியாய் தவித்தது..
எல்லோரும் பேசி முடிவெடுத்து பொன்னாச்சிம்மாவை நாகூர் அழைத்து வந்து சேர்த்தோம்.. ஜட்ஜ் அப்பா, அவர்களது துணைவியார் சேச்சிமா, அன்னாரது மகளார் தங்கச்சி என எல்லோரும் வந்து தங்கினார்கள்..
ஒரு வாரமும் அதே நிலைமை..செல்ல மாமி உடம்பு முடியாதவர்கள்.. அவர்களது தைரியம்..ஒரு ஆணுக்கு கூட இருக்காமல் போகலாம்..அவர்கள் வந்து தன் வலி பொறுத்து எங்களுக்கு வழியும் காட்டினார்கள்..
ஜட்ஜ் அப்பா எல்லாம் திரும்ப போய் விட்டார்கள்..
நான் வந்து நின்று பொன்னாச்சிம்மாவை பார்க்கிறேன்..அந்த அழகிய முகம் இதோ வலியை வெளிக்காட்ட கூட தெம்பில்லாமல்..
திரும்பி பார்க்கிறேன்..
கண்ணீரும் கம்பலையுமாக ஆணிமா,
கத்தி கதறும் பவுன்மா,
ஊசி போடவே பரேஷன் பண்ணுவது போல் நடுங்கும் எங்க ம்மா..
பித்து பிடித்தது போல் காட்சி தரும் சேச்சி..
இதோ மீண்டும் என் நினைவலைகள்..
இறைச்சி கடை சாலி வீட்டு ஆசியா மரியம் பேசுவது போல் பேசி காட்டுவேனே அதன் படி பேசி காட்டவா?..
நகை.. கல்யாணத்துக்கு போட கொடுத்ததை திரும்ப வாங்கி வருமாறு என்னை அனுப்ப நான் போய் கதவை தட்டியவுடன்
ஒரு பெண்மணி வந்தார்கள்..
அது தான் ஆசியா மரியம்..
என்னை பார்த்ததும் நான் அஜிஸ் வீட்டு பிள்ளையென(எங்கள் வீட்டை அஜிஸ் வீடு என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது.. அஜிஸ் வேறு யாருமல்ல.. பொன்னாச்சிம்மாவின் வாப்பா தான்) விளங்கி கொண்டார்கள்..
நான் உடனே ‘கொடுத்ததெல்லாம் கேட்டாஹா’ என்று கூற
அஹ ‘ம்..ம்..’ என்றார்கள்..
நான் என்னைத்தான் வெடைக்கிறாஹா என்று தவறாக நினைத்து..’என்னது ம்..ம்மா..’என்று கடுப்பாக..
அவர்களோ ‘கொடுத்ததெல்லாம் கேட்டாஹ தானே தம்பி..’ என்று இழுத்து இழுத்து பேச..
அஹலுக்கு பரேஷன் பண்ணியதிலிருந்து குரல்
சரியாக வராது என்பதை பொன்னாச்சிம்மாவிடம் அப்படியே அவர்கள் பேசுவது போல் இழுத்து இழுத்து பேசி காட்டி அவர்கள் நான் சொல்லி காட்டிய விதத்தை ரசித்து, சிரித்து என்னிடம் சொன்ன பிறகு தான் தெரிந்தது..
அதே போல் இப்பொழுது பேசவா? சிரிப்பீங்களா? யா அல்லாஹ் அழுது புலம்புகிறேன்..
பொன்னாச்சிம்மா..கபீருக்கு கை உடைந்த போது நீங்க துடித்தீர்களே..உங்களுக்கு ஏதாவது ஒண்ணுண்ணா எங்க எல்லார் நெஞ்சும் உடைஞ்சுடுமே..அதை நீங்க தாங்க மாட்டீங்களே..
என் நினைவலைகள் தன் மண்டையை உடைத்துக் கொண்டன..
பொன்னாச்சிம்மாவின் தங்கை முத்தாச்சிமாவின் கணவர் செல்லாப்பா பொன்னாச்சிம்மாவை பார்க்க வந்தார்கள்….
‘இது யார் தெரியுதா?’ என்று செல்லமாமி கேட்க
கண்ணை மூடிக் கொண்டே ‘ஏன் தெரியாது சாதிக் மரக்கார் இப்ப தான் உறவாயி வந்திருக்கிறாரு’ என்றார்கள்..
செல்லாப்பா சேத்தப்பா மேலே ஒரு கேஸ் போட்டு விட்டார்கள்.. பேப்பரிலும் செய்தி கொடுத்து விட்டார்கள்.. சேக் ஹஸன் சாபு பார்த்து சொல்லி தான் எங்க குடும்பத்துக்கே தெரியும்..
செல்லாப்பா சேத்தப்பாவை கோர்ட்டுக்கு இழுத்து விட வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்ததை அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் உணர்த்தியது..
எங்க வீட்டு போன் நம்பருக்கும் எனது ஞான குருவான ஹஜ்ரத் அவர்களது வீட்டு போன் நம்பருக்கும் ஒரு நம்பர் தான் வித்தியாசமாதலால் பில் மாறி விட்டது.. அதன் காரணமாக சேத்தப்பாவும் ஹஜ்ரத்தும் தொலைபேசியில் உரையாட நேர்ந்தது.. அப்போது ஹஜ்ரத் கேஸ் விஷயம் பற்றி கேட்டறிந்ததும்..  ஹஜ்ரத்துடைய மாணவரும் எங்க வாப்பாவுடைய தோழருமான ஜ•பருல்லா அவர்கள் போய் ஹஜ்ரத்தை நேரில் சந்தித்ததும் கேஸ் பற்றிய விபரங்களை தெளிவு படுத்தினார்கள்.
சேத்தப்பவை காமத்து பண்ணியதில் நாகூர் எஜமானின் கராமத்தும் இருந்தது.. அது போக பெரும் பங்கு எங்க வாப்பாவுக்கும் இருந்தது..அப்புறம் ஜ•பருல்லா, வக்கீல் சமது இவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு.
எங்க வாப்பா கோர்ட்டுக்கு அலைந்தது என்ன? அதை விட பெரிய கோர்ட்டான தர்ஹாக்கு அலைந்தது தான் என்ன?
சொத்துக்காக நடந்த கேஸில் சொந்தம் முறிந்தது.. எந்த அளவிற்கு என்றால் ஒரு கல்யாணதுக்கு செல்லாப்பா வீடு முறையாக அழைக்கப்பட வில்லை.. செல்லாப்பா மகன் யூசுப் கல்யாணத்துக்கு நாங்கள் யாரும் செல்ல வில்லை..அந்த அளவிற்கு..
செல்ல மாமா பற்றி இங்கே சொல்லியாக வேண்டும்.. ஒரு முறை செல்லமாமாவை வெளியூரில் படிக்க ஹாஸ்டலில் சேர்த்து விட்டுட்டு பொன்னாச்சிம்மா சேத்தப்பா எல்லாம் அப்பொழுது தான் ஊர் வந்து சேர்ந்தார்கள் அன்று இரவே கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திறந்தால் செல்லமாமா..
பொன்னாச்சிம்மா ‘ஏன் அதுக்குள்ள வந்துட்டா’ என்று ஏச.. அதற்கு செல்லமாமாவோ ‘உன்னை நம்பி தானேம்மா வந்தேன் நீயே இப்படி சொல்றீயே’ என்றார்களாம்..
அந்த செல்லமாமா தான்.. அவர்களுக்கு சொல்லும் அளவுக்கு சொத்துக்கள் இல்லை னாலும், தனக்கு சொந்தமான வீட்டை தனது வாப்பாவுக்காக கொடுக்க முன் வந்தார்கள்..
செல்லமாமியும் குடும்ப நலன் கருதி அனுமதித்தது அவர்களது பெருந்தன்மை..
ஒரு பக்கம் சொத்துக்காக சொந்தம் பிரிந்தாலும் இன்னொரு பக்கம் சொத்தை கொடுக்க அதே சொந்தம் தான் முன் வந்தது..
நான் பொன்னாச்சிம்மாவிடம் ஒரு முறை கேட்டேன், ‘உங்களுக்கு யாரை பிடிக்கும்? உங்க பிள்ளைங்க..மருமக பிள்ளைங்க இவர்களில் யாரை உங்களுக்கு  ரொம்ப பிடிக்கும்?’
பொன்னாச்சிம்மா ‘ஹாஜா’ என்று தனது மூத்த மகனை தான் சொன்னார்கள்..
‘என்ன பொன்னாச்சிம்மா இப்படி சொல்றாஹா?’ நான் நினைத்தேன் எங்க வாப்பாவை தான் சொல்வார்கள் என்று..
நான் பொன்னாச்சிம்மாவிடம் கேட்டே விட்டேன், ‘எங்க வாப்பா அவ்வளவு கஷ்டப்பட்டார்கள் சேத்தப்பா கேஸ் விஷயத்தில்..எங்க வாப்பா பேரைல சொல்லணும்’ என்று..
பொன்னாச்சிம்மா சிரித்தார்கள்.
சரி.. செல்லாப்பாவும் வந்து பொன்னாச்சிம்மாவை பார்த்துட்டாஹா… பொன்னாச்சிம்மா எல்லோருக்கும் விடை கொடுப்பது போல் எல்லோர் நெற்றியிலும் முத்தம் கொடுத்தார்கள்..
ஒரு வாரம் கழிந்தது..
முன்பு ஒரு முறை நான் வெளிநாடு செல்ல போகிறேன் என்று பொன்னாச்சிம்மாவிடம் சொன்ன போது ‘இரு போகலாம்’ என்றார்கள்..
‘இரு’ என்று சொன்னதன் காரண நாள் வேதனையுடன் வந்தது…
அது தான்..
கடைசி நாள்..
உம்மனை வீட்டு சலாஹ¥த்தீன் ஹஜ்ஜுக்கு சென்று திரும்பியிருந்தார்.. பொன்னாச்சிம்மாவோ படுக்கையில்.. ஜம்ஜம் தண்ணீரை ஒரு சம்சாவில் ஊற்றி வாயில் வைத்தார்..
வாப்பா அலுவலகம் போகும் போது ‘பார்த்துக்க’ என்று சொல்லி விட்டு சென்றார்கள்.
கடைசி நிமிஷங்கள்..
சேத்தப்பா வந்து தன் அன்பு மனைவியை பார்க்கிறார்கள்.. ‘நான் கல்யாணம் கட்டினேன் உங்களை.. ஆனால் நீங்களோ 5 பிள்ளைகள் பெற்று, பேரப் பிள்ளைகள் பார்த்து அவ்வளவு பெரிய குடும்பத்தை அள்ளவா அழகாக கட்டினீர்கள்.. கஜானாவில் ஏதும் உள்ளதா அல்லது குறைந்ததா என்று கூட வெளியே தெரியாமல் குடும்ப கவுரவத்தை அள்ளவா கட்டினீர்கள்’ என்று உள் மனம் ஏங்கியிருக்க வேண்டும்
உண்மையில் அவர்களுடைய கஜானா  இறைவன் போல் புதைக்கப்பட்ட புதையலாக தான் இருந்தது.
சேத்தப்பா.. ‘அவ்வளவு தானா.. தாங்காதா?’..என்று அழுது விட்டு சென்றார்கள்..
நான் ஒரு பக்கம்..
செல்ல மாமி மறு பக்கம்..
நடுவில் பொன்னாச்சிம்மா…
பொன்னாச்சிம்மாவிற்கு பேச்சு தெளிவாக வந்தது..
என்னை பார்த்து, ‘நீ எந்திரி’ என்றார்கள்.. இஸ்ராயீல் தெரியாமல் என்னை பிடித்து விட்டால் என்ற பயமாகவும் இருந்திருக்கலாம்..
வஸிய்யத்து வழிய வந்தது..
“எல்லோரும் ஒத்துமையா… கல்யாணம் காட்சி… ஒத்துமை..”
திரும்ப திரும்ப சொன்னார்கள்..
உயிர் பிரியும் போது கூட இருப்பவர்களை சேர்ந்து இருக்க சொன்னார்கள்..
“ஜட்ஜ் அப்பா உடம்பு முடியாத ஆளு.. அவரை தொந்தரவு கொடுக்காதீங்க..” என்றார்கள்..
அவர்களது ரூஹ¤ மெதுவாக வெளியேறிக் கொண்டிருந்தது..
‘என்னய கெட்டியமா புடிங்க… என்ன என்னய புடிக்கவே மாட்டேங்குறீங்க..’ என்றாஹா..
செல்ல மாமி கெட்டியமாக பிடித்தவாறே ‘கெட்டியமா தானே மாமி புடிச்சிட்டிருக்கேன்’ என்று அழுதார்கள்..
‘எங்கள விட்டுட்டு போவாதீங்க பொன்னாச்சிம்மா..’ நான் துடித்தேன்..
‘சும்மா இரு.. இது தான் சரியான நேரம்..’ என்றார்கள்..
‘வாப்பாவை பத்திரமா பார்த்துக்குங்க..’ என்றார்கள்..
‘செல்ல தங்கம் எந்திரிங்க..’
பேச்சு தெளிவாக இருந்தது..
கடைசி வார்த்தை..
‘அல்லஹூஅக்பர்..’ உத்திரவு வாங்கிக் கொண்டார்கள்..
வல்லவன் அல்லாஹ் பேரைச் சொல்லி தன் வாழ்வை முடித்து கொண்டார்கள்..
என்னால் தாங்கவே முடியவில்லை..கருத்து தெரிந்து நான் சந்தித்த முதல் பேரிழப்பு இது..
ஆணிமா மகள் ஜீனத் என் மீது ரொம்ப பிரியமாம்..ஜீனத் சிறிய வயதிலேயே மெளத்தான செய்தியை நான் அவ்வளவாக உணற வில்லை..எனக்கு அந்த வயதில் ஒன்றும் புறியவில்லை..
சின்ன வயதில் பொன்னாச்சிம்மாட நானா முத்தப்பா மனைவி ஆச்சிக்கனிமா மெளத்தான பிறகு நானும், ராஜாவும் குளிப்பாட்ட வந்த ஒரு பெண்மணியிடம் ‘சீக்கிரம் போய் எங்க ச்சிக்கனிமாவை காப்பாத்துங்க’ என்று என்னம்மோ அவர்களது கையில தான் ரூஹ¤ உள்ளது போல் அறியாமல் சொன்ன போதும் போத்¢ய வ்¢பரம் இல்லை..
அப்புறம்.. பவுன்மா மகன் கபீர் தம்பி நியாஸ் மெளத்தான போது எனக்கு அந்த துயரம் ஓரளவு புரிந்திருந்தது..
ஆனால்.. இன்று..பொன்னாச்சிம்மாவின் மரணம்..
என் முதல் முழு துயரம்..
மரணம் என்றால் என்ன?- நிரந்தர பிரிவு, தவிர்க்க முடியாத நிகழ்வு என்று எனக்கு விளங்கியது-
உருது மகா கவி அல்லாமா இக்பால் எழுதிய கவிதை நினைவலைக்கு வந்தது.. ‘மனிதர்கள் எல்லோரும் மரணத்தை கண்டு பயந்து ஓடுகிறார்கள்.. னால் ஏ! மரணமே!! அவர்கள் உன்னை நோக்கித் தான் ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள்..’ என்று அவர் பாடிய கவிதை மரணத்தின் வாசலில் எல்லோரும் தான் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு உணர்த்தியது..
‘இறைவனிடமிருந்தே வந்தோம் இறைவனிடமே மீண்டு செல்வோம்’ என்ற திருமறை குரான் வசனத்தை உச்சரித்தேன்-
கிரசெண்ட் ஸ்கூலுக்கு சென்று முத்தா, பல்கிஸை அழைத்து வந்தேன்.. காரில் அழைத்து வரும் போது விபரத்தை சொன்னேன்..
வேறு என்ன? அழுகை தான்…
எங்களுக்கு.. 10 பேர் இருப்போம்.. மதியம் எதிர் வீடான அசீம் வீட்டில் சமைத்து சாப்பாடு போட்டார்கள்..
கசவு மாத்தி,குளிப்பாட்டி,கபன் கட்டி எல்லா கடைசி காரியங்களும் நடந்து கொண்டிருந்தது..
ஜட்ஜ் அப்பா வந்து, சேத்த மாமா பேங்காக்கிலிருந்து வந்து (இருவரும் சென்னையிலிருந்து ஒன்றாகத் தான் வந்தார்கள்) கதறு கதறுன்னு கதறி… அழுது மடிந்து, பதறி துடித்து…யார் என்ன செய்ய முடியும்..?
யாசீன் லிம் சாபு வந்து சேத்தப்பாவிடம்,”கெளதுல் லத்தோட மாதம்” என்றார்கள்..
பாக்கர் லிம் சாபு’ “இந்த நேரத்தில் பொறுமையாக இல்லை என்றால் அல்லாஹ் சொல்றான், வேறொரு நாயனை பார்த்துக் கொள்ளுங்க என்று” -என்று ஹதீஸ் சொன்னார்கள்
பொன்னாச்சிம்மா இருந்த போது எல்லாமே இருந்தது.. இறந்த போது எல்லாமே இறந்தது..
‘சபூர் செய்யுங்கள்’ என்று எல்லோரும் சொன்னார்கள்..
ஆணிமா சபூர் செய்வாஹலா?…ராணி வார இதழில் வந்த ஒரு கதையில் மரகதம் என்ற ஒரு கதாபாத்திரம் தன் அம்மாவுடன் பல நாட்கள் கழித்து சேர்ந்ததற்கு தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி ‘மரகதம் அவ உம்மாவோட சேர்ந்துட்டா’ என்று பூரித்தார்களே.. இப்பொழுது அவர்களே அவர்களது ம்மாவை பிரிந்து தவிக்கிறார்களே.. எங்கேயிருந்து சபூர் செய்வது?
எங்க உம்மா சபூர் செய்வாஹலா?..பொன்னாச்சிம்மா ஒரு முறை பேங்காக்குக்கு பயணம் புறப்பட்ட போது..அழுத எங்க உம்மாவிடம் ‘இதை விட பெரிய பயணம் இருக்கு’ என்று பொன்னாச்சிம்மா சொல்ல அழுது மடிந்து ஆறா பெருகுனாஹலே..அந்த பெரிய பயணம் இதோ வந்து விட்டதே..
எங்கேயிருந்து சபூர் செய்வது?..
பொன்னாச்சிம்மாவுக்கு பவுன்மா மேலும் ஒரு தனி பிரியம் இருந்தது..ணிமா வீடு கட்டிக் கொண்டிருந்தாஹா.. வேலை முடிந்ததும் குடி போயிடுவாஹா..அப்புறம் எங்க உம்மா தனியா போயிடுவாஹா.. இப்படி எல்லோரும் தனியா போயிட்டால் தன் கண்ணுக்கு பிறகு பவுன் தனியா இவ்வளவு பெரிய வூட்ல இருந்துகஷ்டப்படுவாளே என்று கவலைப்படாத நாளே கிடையாது..அந்த தனிமை இப்ப வந்து விட்டதே..பவுன்மா சபூர் செய்வாஹலா?..
சேச்சி எங்கே?..இதோ நெஞ்சில் அடித்துக் கொண்டு ..யார் தான் சபூர் செய்ய முடியும்?
பொன்னாச்சிம்மாவின் உடல் சந்தாக்கில் ஏற்றும் முன் யாரோ சொன்னார்கள் ‘கடைசியாக ஒரு முறை பார்த்துக்
கொள்ளுங்கள்’ என்று..
எல்லோரும் வந்து பார்த்தார்கள்..
எல்லோரும் துடிக்க உடல் சந்தாக்கில் ஏற்றப்பட்டது..
இறுதி ஊர்வலம்.. நான் செருப்பு கூட போடவில்லை..
சந்தாக்கை தூக்கினேன்.. நிறைய பேர் தூக்கினார்கள்.. பெரும் கூட்டம்..
ஊர் மரக்காயர் ‘கலிமா சஹாதா’ என்று சொல்ல எல்லோரும் ’லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’  என்ற கலிமாவை சொல்ல ஊர்வலம் மியா தெருவை கடந்து குஞ்சாலி மரக்காயர் தெருவையும் கடந்து கடை தெருவில் புகுந்து தர்ஹாவில் நுழைந்து பெரிய எஜமான் வாசலில் வைக்கப்பட்டது..
எல்லோரும் ஒலுச் செய்து விட்டு வந்தார்கள்.. ஜனாஸா தொழுகை நடந்தது.. முடிந்ததும் மைத்தாங்கொல்லைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.. ஏற்கனவே தோண்டியிருந்த குழிக்குள் உடலை வைத்தார்கள்..
கடைசியாக முகத்தை திறந்து காட்டினார்கள்..நான் பார்த்தேன்..முகமா அது..அன்பின் வடிவம் அல்லவா அது.. முகத்தை மனதில் படம் பிடித்தேன்.. கடைசியாக ஒரு முறையா.. எப்பொழுது வேணும்னாலும் நான் என் மனதிலிருந்து பார்த்துக் கொள்வேன்..
முகம் மூடப்பட்டது.. எல்லோரையும் மண் எடுத்து கொடுக்க சொன்னார்கள்.. நானும் கொடுத்தேன்.. பாசம் கொட்டி வளர்த்த எங்கள் பொன்னாச்சிம்மாவிற்கு மண் கொட்டியா பதில் மரியாதை செய்ய வேண்டும்.. குழி மூடப்பட்டது..
செல்லாப்பா சொன்னது தெளிவாக கேட்டது.. ‘அவ்வளவு தான் பொன்னாச்சிம்மாட சகாப்தம் முடிந்து விட்டது..’ என்றார்கள்.. எனக்கு அப்படி பட வ்¢ல்லை.. பொன்னாச்சிம்மா கடைசியாக சொன்னார்களே அந்த ஒற்றுமை.. அதை அவர்களே எங்களுக்குள் இருந்து பார்த்துக் கொள்வார்கள் என்று தான் பட்டது..
வீடு திரும்பினோம்… வாசலில் வரிசையாக நின்றோம்.. எல்லோரும் சலாம் கொடுத்தார்கள்.. முடிந்ததும் உள்ளே வந்தோம்..
ஜட்ஜ் அப்பா எல்லோர் முன்னாடியும் சொன்னார்கள்… ‘பொன்னாச்சி பிறந்தது இந்த வூட்ல தான், வளர்ந்ததும் இந்த வூட்ல தான், மெளத்தா போனதும் இந்த வூட்ல தான்.. இந்த மாதிரி எல்லோருக்கும் அமையாது..’ என்று சொன்னார்கள்..
கூடவே இருந்தேன் அல்லவா?
எனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. என் ஞான குரு ஹஜ்ரத் அவர்களிடம் போய் ஓதி பார்த்தேன்..
எங்கேயாவது தொலைந்து விடலாமா என்று கூட தோன்றியது..
அவர்கள் இல்லாத வீடு திக்கு தெரியாத காடாகவே தோன்றியது..
பொன்னாச்சிம்மா சொன்ன கடைசி வார்த்தை நினைவுக்கு வந்தது..’அல்லாஹ¤ அக்பர்..’ ஆமாம்.. பெரியவன் அல்லாஹ்வை நினைத்து பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்..’
அப்புறம், ஒரு வருஷம் இருக்கும்.. சேத்தப்பாவும் தனது வாழ்வை முடித்துக் கொண்டார்கள்.
எல்லாம் போச்சு.. ஆளாளுக்கு ஒரு வீட்டை கட்டிக் கொண்டு தனித்தனியாக வந்து விட்டோம்.
நான் பிழைப்பு தேடி புருணை புறப்பட்டேன்..
முன்பெல்லாம் வீட்டில் யாராவது பயணம் புறப்பட்டால் பொன்னாச்சிம்மா பால் பழம் எல்லாம் ஊட்டி விட்டு வாய் நிறைய துவா செய்து அனுப்புவார்கள்..
ஆனால் இன்று.. பெட்டியிலும் மனதிலும் பாரத்தை சுமந்துக் கொண்டு துயரத்தோடு கிளம்பினேன்..
புருணையில் இருந்த போது பொன்னாச்சிம்மாவையும் சேத்தப்பாவையும் ஒரு முறை கண்டேன்.. நன்றாக இருக்கிறார்கள்.. ‘நீ நல்லா இருக்கீயா?’ என்று என்னையும் விசாரித்தார்கள்..
சட்டென்று விழித்தேன்.. கண்களில் கண்ணீர்.. கண்கள் விழித்து விட்டாலும் கனவுகள் கலையவில்லை.. படுக்கையில் எழுந்து உட்கார்ந்துக் கொண்டே, ‘நான் நல்லா இருக்கேன் பொன்னாச்சிம்மா’ என்றேன்..
அ.முஹம்மது இஸ்மாயில்
Advertisements