உடல் எழுத்து

அதிகாலை எழு

ஆகாயம் தொழு

இருதயம் துடிக்கவிடு

ஈறழுந்தப் பல் தேய்

உடல்வேர்வை கழி

ஊளைச்சதை ஒழி

 

 

எருதுபோல் உழை

ஏழைபோல் உண்

ஐம்புலன் புதுக்கு

ஒழித்துவிடு புகைமதுவை

ஓட்டம் போல் நட

ஔடதம் பசி

அஃதாற்றின் எஃகாவாய்.

 

திரிபுகள்


 

சங்கீதம்

இரைச்சலின் கூட்டணியாய்

கவிதை

இருண்மையின் திமிராய்

கலை

விலைமகளின் உதட்டுச்சாயமாய்

மதம்

கடவுள் விற்கும் கள்ளச்சந்தையாய்

அன்பு

பணத்தின் புன்னகையாய்

அழகு

பிணத்தின் நிர்வாணமாய்

காதல்

சந்தர்ப்பங்களின் ரகளையாய்

இல்லறம்

காதலின் சமாதியாய்

புணர்ச்சி

தூக்கம் அழைக்கும் உடற்பயிற்சியாய்

இருத்தல்

சாகப் பயந்தவர்களின் சம்மதமாய்

கல்வி

இருதயம் கொன்று வயிற்றில் புதைக்கும் ஏற்பாடாய்

இயற்கை

வருடம் ஒரு முறை வாழ்த்து மடல் ஓவியமாய்

சட்டம்

ரூபாய்க்குத் திறக்கும் ஜன்னலாய்

நீதி

டாலருக்குத் திறக்கும் கதவாய்

இளமை

உடல் கொல்லும் இன்பமாய்

முதுமை

இன்பம் கொன்ற உடலாய்

 

திரிந்தும் பிறழ்ந்தும்

தேய்ந்த பின்றை

புளித்த சாராயம் ஆகாதா என்ன

வாழ்வெனும்

அமிர்தம் !

 

ஆறாம் பூதம்


 

வாழ்வு சேறு

காதல் தாமரை

யாக்கை திரி

காதல் சுடர்

உயிர் நதி

காதல் கடல்

பிறவி பிழை

காதல் திருத்தம்

இருதயம் கல்

காதல் சிற்பம்

ஜென்மம் விதை

காதல் பழம்

லோகம் துவைதம்

காதல் அத்வைதம்

சர்வம் சூன்யம்

காதல் பிண்டம்

மானுடம் மாயம்

காதல் அமரம்.

 

அழைப்பு


 

தயவு  செய்து

என்னைத் தொல்லை செய்

தயவு செய்து

என்னைக் கொள்ளையடி

 

கழுத்தடியில்

ஒரு செல்லக்கடி கடி

 

கூந்தல் கலைத்துப்

பூக்களை உதிர்த்துவிடு

ஓடிப்பிடித்தென்னை

உருக்குலைத்துப் போடு

 

குளித்துவரும் என்னை

மீண்டும் அழுக்காக்கு

 

எதிர்பாரா இடத்தில்

என்னைத் தீண்டு

 

எவ்வளவு இயலுமோ

அவ்வளவு தழுவு

 

எங்கே என் உயிரென்று

கண்டுபிடி

அதன் இடவலம் தொடு

 

இதுதான்

இதுதான் நான் கேட்டது

உதட்டு எச்சிலால் என்

உடல் பூசு

 

முத்தமிட்டு என்

மூச்சை நிறுத்து

 

இது ஒன்றும்

ஒரு வழிப்பாதையல்ல

என் பங்கு செலுத்த

எனக்கும் இடம்கொடு

 

அங்கங்கே பரவு

எலும்பில் மஜ்ஜைகளில் ஊடுருவு

 

மார்பகப் பள்ளத்தில்

முகம் வைத்து மூச்சுவிடு

 

மேகங்களுக்கிடையில்

நட்சத்திரம் தூங்கினாலும்

இலைகளுக்கிடையில்

காற்று தூங்கினாலும்

என் கண்கள் உனக்காக

இரவெல்லாம் விழித்திருக்கும்

 

உனகில்லாத உரிமையா

பூனையின் பாதம் பொருத்திப்

பொசுக்கென்று வந்து

புடைவையிழு

 

தீவிரத்தால் என்னைத்

திணறவை

 

என்னைத் தூண்டிவிட்டு

எங்கேனும் ஒளிந்து கொண்டு

நித்தமொரு தடவை

என்னை அழவை

 

என் பெண்மையின்

பரிபூரணமே

என் வெற்றிடம் வழிய

நிறைந்த நிறைவே

 

தாழாத தனங்கள்

தாழ்ந்தன உனக்காக

ஆகாய கங்கை

பாய்ந்தது உனக்காக

 

வா வா

என்னை வலிசெய்

உயிர் பருகி ஒலிசெய்

 

என்னுயிர் பயிராகும்

நீ பல் பதித்த பள்ளத்தில்

 

எனக்குள்ளே பூப்பொழியும்

நீ முட்டும் அதிர்வில்

 

உன் நகர்தலுக்காகத்

துடிக்குதென் ஆடை

உன் நகம் கிழிக்க

வீங்குதென் மார்பு

 

தொட்டுக் கொண்டுறங்கும்

சுகமொன்று கருதி

உடலென்ற உலையில்

கொதிக்குதென் குருதி

 

நீ தந்த சுகமெல்லாம் ——

 

நெற்றியில் தீயெரியும் தியானத்தில் வந்ததில்லை

வில்லாய் விறைக்கும் கலவியில் கண்டதில்லை

பிரசவம் முடிந்த பெருமூச்சில் கொண்டதில்லை.

 

எங்கே மீண்டுமொரு முறை

முந்தானைக்குள் புகுந்து

முயல்குட்டியாகு

 

தட்டாதே

தாய் சொல்லைக்கேள்

பத்துமாதம் என் வயிறுசுமந்த

பிஞ்சுப் பிரபஞ்சமே

 

தொகுப்பு

..ஷஹி..

Advertisements