ஓய்வு கவிதை

ஓய்வு கவிதை

 

மாலை போட்டார்கள்!

மரியாதை செய்தார்கள்!

புறம் பேசியவர்கள் கூட

புகழாரம் செய்தார்கள்!

பெருமை பொங்கும் நாள்தான்…

உவகை பொங்கும் நிகழ்வுதான்…

நாளை முதல் என்னவென்ற

நினைவு வந்து உறுத்தாதவரை…..

 

உலகம் கொஞ்சம் முரண்பாடானது…

இருபதில் ….

மனம் மணம் தேடுகிறது…

ஆனால்

உலகம் வேலை கொடுக்கிறது!

அறுபதில்…

மனம் பொறுப்பு தேடுகிறது…

உலகமோ…..

வேலையை எடுத்து

அறுபதாம் மணம் தருகிறது!

 

கோலாகல கொண்டாட்டத்துக்குப் பிறகு..

கொண்டு போய் விட்டார்கள்  வீட்டில்….

போட்ட மாலையின்

உதிர்ந்த மலர்கள் மட்டும்

அவன் பணி செய்த நாட்களின்

டைரி குறிப்புகள் போல

அலுவலக மூலையில்

மெல்ல மெல்ல வாடத் தொடங்கின..!

 

ஒரு தீரா தனிமையும்

பல சேரா முகங்களும்

ஒரு ஈசி சேரும்

செய்தித்தாளும்

எப்போதாவது கேட்கும்

சம்பிரதாய செல்பேசி மணியும்

அவ்வப்போது கிடைக்கும்

பென்சன் மணியார்டரும்…

………………………………….

ஓய்வு………

மெல்ல மெல்ல

அவனை

விழுங்கிக் கொண்டிருந்தது…..!

 

 

 

 

 

 

 

 

Advertisements