தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் கூட இல்லாத நிலையில், தொகுதி நிலவரங்களை கொஞ்சம் அலசிப் பார்க்கலாமா? தேர்தல் கிட்டக்கிட்ட நெருங்கும்போது, வேட்பாளர்களின் களப்பணியாற்றும் விதத்தாலும், தலைவர்களின் பிரச்சாரங்களாலும் , சில தொகுதிகளின் நிலவரங்கள் மாறக்கூடும். அப்படி மாற்றங்கள் உள்ள தொகுதிகளை மட்டும் ,மீண்டும் ஒரு முறை விவாதிக்கலாம். இப்போது முதன் முதலாக, நட்சத்திரத் தொகுதிகளை முதலில் பார்த்துவிடுவோம்.

1. ஸ்ரீரங்கம்:-
சீஃப் மினிஸ்டர் கேன்டிடேட்டான ஜெயலலிதா இங்கு போட்டியிடுவதால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது. இத்தொகுதியில் 30./. மட்டுமே நகர்ப்புறத்தில் உள்ளது. மீதி 70./. கிராமங்களே உள்ளன. இங்கு 1952 முதல், 13 சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அ.தி.மு.க. 6 முறையும், காங்கிரஸ் 3 முறையும், தி.மு.க. ஒரு முறையும், ஸ்தாபன காங்கிரஸ் ஒரு முறையும், ஜனதா தளம் ஒரு முறையும், கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை பாராளுமன்றத் தேர்தலையே தீர்மானித்தது இந்த ஸ்ரீரங்கம் தொகுதி. திருச்சி பாராளுமன்றத் தொகுதியின் கீழ் 6 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன.

5 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அ.தி.மு.க. வுக்கும் இடையே வெற்றியைத் தீர்மானிப்பதில் கடும் போட்டி நிலவியது. அப்போது, இறுதியாக சீரங்கம் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டபோது, காங்கிரஸ் வேட்பாளரைவிட, 20,182 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ,அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். இத் தொகுதியில் , முத்தரையரும் ஆதி திராவிட மக்களும் அதிக அளவில் வாழ்கின்றனர். 3வதாக பிராமணர்களும் அதே அளவில் உடையார்களும் வசிக்கின்றனர். ஒட்டு மொத்தமாக பிராமணர்க்ளின் ஓட்டு தங்களுக்குக் கிடைக்கும் என்பது அ.தி.மு.க.வினரின் எதிர்பார்ப்பு. இந்த மக்களுக்கு சில கோரிக்கைகள் உள்ளன. கோவிலுக்கும், மடங்களுக்கும் சொந்தமான இடங்களில் அடி மனை வாடகையைக் கொடுத்துவிட்டு, பகுதிவாசிகள் வாழ்கின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் வீட்டை தங்களுக்கு பட்டா போட்டுத் தரும்படி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த முறை ஜெ. கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது அவரிடமும் மனு கொடுத்துள்ளனர். கிராமப்புற மக்களிடமும் கோரிக்கைகள் உண்டு. விவசாயமே பிரதான தொழிலான இவர்களுக்கு காவிரித் தண்ணீர் சரியான நேரத்துக்குக் கிடைப்பதில்லை.

காவிரிப் பிரச்சினையத் தீர்க்கவேண்டும் என்பது இங்குள்ள பிரதான கோரிக்கையாக உள்ளது. தற்போது காவிரி கொள்ளிடத்திலிருந்து ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லப் படுகின்றது. இதனால், இன்னும் 10 ஆண்டுகளில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படப் போகின்றது. எனவே இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் இங்கு களமிறங்கப் போகும் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கப் போகும் தி.மு.க. வேட்பாளர் , அமைச்சர் நேருவின் சிபாரிசான ,29 வயதே ஆன சாந்தாபுரம் ஆனந்தன் என்பவர். இவர் 120 ஏக்கர் விவசாய நிலங்கள், வாழை மண்டிக்கு சொந்தக்காரரான கோடீஸ்வரர் என்பதால் மட்டுமல்ல. 55000 ஓட்டுகளைக் கொண்ட முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவராகவும் இவர் இருப்பதும் ஒரு காரணமாகும். ப்ராமின் ஓட்டுக்களைக் குறி வைத்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், இங்கு 14000 ஓட்டுகளே பிராமின் ஓட்டுகளாகும்.அது மட்டுமின்றி தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் ஒரு பட்டதாரியும் கூட. வெற்றி யாருக்கு என்பது கொஞ்சம் பொறுத்தால் தெரிந்துவிடும்.

 

 

2. திருவாரூர்:-
இதுவும் ஒரு அதி முக்கியம் வாய்ந்த முதலமைச்சர் தொகுதியாகும். திருக்குவளையில் பிறந்த முதலமைச்சர் கருணாநிதி படித்தது, வளந்தது எல்லாம், திருவாரூர்தனாம். திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞரின் தாயாரின் நினைவிடம் உள்ளது. தேர்தல் பணியைத் தொடங்கும் முன்பும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பும் அன்னைக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் பணிகளைத் துவக்குவாராம். சமீபத்தில் திருவாரூரில் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவின்போது ,முதலமைச்சர் தனது சொந்த மண்ணில் போட்டியிட வேண்டும், என்ற விருப்பத்தை பலரும் வெளிப்படுத்தினார்களாம் .11 சட்ட மன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ள இந்தத் தொகுதியில், காங்கிரஸ் ஒரு முறையும், மா.கம்யூனிஸ்ட் 5 முறையும், தி.மு.க. 5 முறையும் வென்றுள்ளது.

கருணாநிதி முதலமைச்சராக ஆன பிறகுதான், இத்தொகுதி பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. ஓடாமல் இருந்த ஆழித்தேர் 21 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி எடுத்த முயற்சியால் ஓடத் துவங்கியது. 1.1.97.ல் திருவாரூர் மாவட்டம் தொடங்கப்பட்டது. 2006 ல் 1000 கோடியில் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 100 கோடியில் மருத்துவக் கல்லூரி துவங்கபட்டது. ஒருங்கிணைந்த நீதி மன்றங்கள் தோன்றின.

தேரோடும் 4 வீதிகளிலும் 6 கோடி செலவில் கான்கிரீட் சாலைகள் போடப்பட்டன. 5 கோடி செலவில் தியாகராஜ கோவில் திருப்பணி நடை பெற்றது.

2 கோடி செலவில் ஆழித்தேர் செப்பனிடும் பணியும், 2 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணியும் நடைபெற்று வருகின்றன. பழைய சாலைகள் என்பதால், சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகின்றன. எனவே, புதிய பஸ் நிலைய வேலைகளை விரைவில் முடிக்க வேண்டும்.விவசாயமே பிரதானம் என்பதால் தொழிற்சாலைகள் தொடங்கிபடித்தஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏறடுத்தித் தர வேண்டும். இங்கு, எவ்வித பொழுது போக்கு அம்சமும் இல்லை என்பதால், உயர்தர வசதிகளுடன் பூங்கா அமைத்துத் தர வேண்டும். கமலாலய குளத்தில் தூர் வாரி, 4 பக்கமும் பூங்காக்கள் அமைத்து அழகுபடுத்த வேண்டும். நகரின் மைய்யப்பகுதியில் உள்ள ஓடம் போக்கி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரவேண்டும். மஹாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இந்த ஆற்றின் கரையில் மணிமண்டபம் கட்ட வேண்டும், என மக்கள் நிறைய எதிர்பார்க்கிறாகள். நட்த்திரத் தொகுதியானதால், எதிர்பாக்கலாம்தான்.

தொடரும்..

Advertisements