tamilnadu elections

tamilnadu elections

 

“டேய் மருது என்னடா கட்சி ஆஃபீஸ் பக்கமே காணம் உன்ன…”

அட போப்பா கட்சியாம் கொடியாம் எல்லாம் பணம் அடிக்க வாரானுங்க… ஊழலு மிரட்டலு… பொண்டாட்டி புள்ள கூட இந்தக் கட்சில இருந்தா மதிக்க மாட்டேங்குது ! அதான் துண்ட ஒதறிப் போட்டுட்டு வந்துட்டேன்!

டேய் மருது ! அட என்னாப்பா நீ! இந்த வாட்டி கட்சி வெளியூர்லேர்ந்து அனுப்பியிருக்குற வேட்பாளரு வித்தியாசமானவரு ! எல்லாமே சரியா செய்யணும்னு ஆசப்படுறாரு ! நேர்மையானவரு! அதனால தான் பழைய மந்திரி கேட்டு கூட இந்தடதொகுதிய கொடுக்காம தலைவரு இவர அனுப்பி வச்சிருக்காரு !

மருது யோசித்தான்… சரி யாருன்னுதான் போய் பார்ப்போமே என்று தோன்றியது … கட்சி ஆஃபீசுக்கு போனான்.. வாசலிலேயே இரண்டு மூன்று பேர்

“வேட்பாளர் வெங்கடேசன் வாழ்க !” என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்.

சட்டென்று உள்ளே இருந்து எளிமையாய் ஒருவர் வெளி வந்தார். நெற்றியில் மெலிதான சந்தனக் கீற்று.. பார்த்தாலே கும்பிடத் தோன்றும் சாந்தமான முகம்…

ஆனால் அதிலும் ஒரு ஓரத்தில் மெலிதான கோபம்…

“ஏம்பா என்ன ஜெயிக்க வைக்க உங்கள கூப்பிட்டேனா இல்ல வாழ்க கோஷம் போட கூப்பிட்டனா? இந்த மாதிரி ஆடம்பர கோஷம் எல்லாம் வேண்டாம்பா ! “

கோஷம் போட்டவனின் தோளில் கை போட்டு அவர் சொன்ன பாங்கே அழகாயிருந்தது. மருதுவுக்கு இந்த புது வேட்பாளர் வெங்கடேசனை பார்த்த உடனே பிடித்துப் போனது.

“அண்ணே.. போஸ்டர் ஒரு அம்பதாயிரம் சொல்லவாண்ணேன்?” வெங்கடேசனைப் பார்த்து வட்டம் விட்டல்ராஜ் கேட்டான…

“அம்பதாயிரம் போஸ்டரா? நான் என்ன சினிமாவுலாயா  நடிக்குறேன்? அதெல்லாம் வேண்டாம்பா.. பத்தாயிரம் அடிங்க… அதுலயும் கட்சி பேரும் தலவரு பேரும் பெரிசா போடுங்க.. என் பேர  ஒரு மூலையில போட்டா போதும் !”

“அண்ணே.. பொதுக்கூட்டத்துக்கு தலைவர் மகன் வர்ரேன்னு சொல்லியிருக்காரு எப்படியும் ஒரு பெரிய பத்து செலவாகும்ணேன்.. லோக்கல் கேபிளுக்கெல்லாம் காசு கொடுத்தாத்தான் கவரு பண்ணுவாங்க!”

“அதெல்லாம் வேண்டாம்பா.. தலைவர் புள்ளக்கிட்ட் நான் சொல்லிக்குறேன்.. சிம்பிளா அரசு மைதானத்துல பண்ணுங்க ! அது போதும் ! கேபிள் காரன் இஷ்டப்பட்டா கவரேஜ் கொடுக்கட்டும் ! காசு கொடுத்தெல்லாம் ந்யூஸ் போட வேணாம்! அதெல்லாம் செய்யக் கூடாதுன்னு எலக்ஷன் கமிஷன் ரூலே இருக்கு! “

மருதுவுக்கு வெங்கடேசனை பார்க்க பார்க்க ஆச்சரியமாயிருந்தது. இந்தக் காலத்துல இப்படி ஒரு தலைவரா?

“அண்ணே! தெரு தெருவா போய் ஓட்டு கேக்கணும்… பசங்க எல்லாம் நைட்டு சரக்கு வாங்கி கொடுத்தாத்தான் பகல்ல சுறுசுறுப்பா சுத்துவானுங்க ! சரக்குக்கு லோக்கல் பார்ல ஒரு 2 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துட்டோம்னா… “

பஞ்சாயத்து பிரசிடென்ட் இழுத்தான்…

“டேய் கட்சிக்காக இவன் போய் ஓட்டு கேட்டா கேக்கட்டும்.. இவனுக்கு சரக்கு வாங்கி கொடுத்துதான் பிரச்சாரம் பண்ணனும்னா  அந்த ஓட்டே தேவை இல்ல ! “

“நெத்தியடி!” மருது மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்!

“தலவரே! கூட்டணி கட்சிகாரங்களுக்கெல்லாம் பொட்டிகொடுக்கணும் ! அப்பத்தான் உள்குத்து வேலை செய்யாம இருப்பாங்க ! “

“இந்த பொட்டி கொடுக்குற வேலையே வேணாம் !”

புது வேட்பாளர் கறாராய் பேசுவதைக் கண்டு கூட்டம் மெல்ல மெல்ல கரையத் தொடங்கியது. வட்டம் , மாவட்டம் எல்லாம் மெல்ல தத்தம் கார்களில் ஓட்டம் காண அப்போதுதான் மருதுவை கவனித்தார் வெங்கடேசன்.

“தலைவரே! இவந்தான் மருது ! கட்சிக்காக பத்து வருஷ்மா உழைக்கிறான் ! லோக்கல் ஆளுங்க எல்லாரையும் தெரியும்! இந்த ஊர்க்காரன் ! ஜனங்க கிட்ட எல்லாம் சகஜமா பழகுவான் !”

மருதுவைக் கூட்டிப் போன சோமு சொன்னான்.

இப்போது அந்த அறையில் வெங்கடேசன், மருது , சோமுவைத் தவிர வேறு எவருமில்லை…

வெங்கடேசன் மதிப்பாய் மருதுவைப் பார்த்தார்.

“ஓ, இதுதான் அந்த ந்யூஸ் பேப்பர் ஏஜன்சி வச்சி நடத்துற பையனா?”

மருதுவுக்கு சதோஷம் பிடிபடவில்லை. புது தலைவர் நாணயமானவரு மட்டுமில்ல … கட்சிக்காரனுங்களப் பத்தி எவ்வளவு  நல்லா தெரி ஞ்சு வச்சிருக்குறாரு !

“ஆமாங்கய்யா !”

மருது பணிவோடு சொன்னான்..

“தம்பி ! உங்கிட்டத்தான் ஒரு முக்கியமான பொறுப்ப ஒப்படைக்கப் போறேன் !  நீ வீட்டுக்கு வீடு பேப்பர் போட பையங்கள அனுப்புறேல்ல…ஒவ்வொரு ந்யூஸ் பேப்பர்லயும் கரக்டா எலக்ஷனுக்கு மொத நாளு ஒரு ஆயிரம் ரூபா தாளயும் நம்ம நோட்டிசயும் வச்சிரணும் ! காதும் காதும் வச்ச மாதிரி காரியத்த முடிக்கணும் !”

வெங்கடேசன் பேசிக் கொண்டிருந்தார். மருது நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்னப்பா பாக்குற… பெரிய தலைவரு என்ன இந்த தொகுதி அனுப்பும்போதே ஒரு பெரிய தொகைய கொடுத்துதான் அனுப்பிச்சிருக்காரு ! அத இந்த முட்டா பசங்க கூட்டம் போடவும் பிரச்சாரம் பண்ணவும் போஸ்டர் அடிக்கவும் வச்சி வீணாக்கப் பாக்குறானுங்க ! இப்பல்லாம் எவன் பிரச்சாரத்த கேட்டோ  போஸ்டரப் பாத்தொ ஓட்டப் போடுறான்… வீட்டுக்கு ஒரு நோட்டக் கொடுத்தா ஓட்டு தானா வருது… அந்த நோட்ட எப்படி எலக்ஷன் கமிஷன் கண்ணுல மண்ணத் தூவிட்டு கொடுக்குறதுன்னு யோசிச்சிட்டிருந்தப்பத்தான் சோமு நீ ந்யூஸ் பேப்பர் ஏஜன்சி வச்சிருக்குறத சொன்னான்.. பொட்டிய இன்னிக்கு வாங்கிக்குறியா இல்ல எலக்ஷனுக்கு ரெண்டு நாள் முன்னாடி வாங்கிக்குறியா? “

Advertisements