விஜய்காந்த் - வடிவேலு

விஜய்காந்த் - வடிவேலு

 

1. ஜெ.வை ‘முதல்வர்’ என்று விஜயகாந்தை எப்படியும் சொல்ல வைத்து விட வேண்டும் ஜெ. போட்ட முதல்வர் கணக்குதான் கோவையில் ஏப்ரல் 6ம் தேதி அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டம். ஆனால், விஜய்காந்த்துக்குப் பதிலாக பண்ருட்டியார்தான் வந்திருந்தார். தன்னை முதலமைச்சர் என சொல்ல வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்த ஜெயலலிதா விஜயகாந்தின் புறக்கணிப்பால், படுகோபமாகி விட்டார். போதும் போதாததற்கு விஜயகாந்தின் வராமைக்கான காரணமாக பண்ருட்டியார் ஒருகதை சொன்னார். “ஒரு ஊரில் வேந்தன் ஒருவன் தன் பிறந்த நாளைக் கொண்டாட ஒரு விருந்து வைத்தான். விருந்தில் அனைவரும் கலந்துகொண்டனர், ஒரே ஒரு விவசாயியைத் தவிர. வேந்தன் போகிற வழியில் அந்த விவசாயி நிலத்தை உழுதுகொண்டிருந்ததைப் பார்த்தான். ஏன், நீ என் பிறந்த நாளுக்கு வர மாட்டாயா?” என்று கேட்டான். அரசனைப் பார்த்த விவசாயி ‘உங்கள் பிறந்த நாளைக்கு வந்தால், அது எனக்கு ஒரு நாள் விருந்து. ஆனால், நான் இந்த நிலத்தை உழுது பயிரிட்டால்தான் நீங்கள் விருந்தே வைக்க முடியும் ‘ என்று சொன்னானாம். கடமையைக் கருத்தாக செய்த அவனை அரசன் பாராட்டினான். அப்படியான கடமையைத்தான் விஜயகாந்த் அங்கே செய்துகொண்டிருக்கிறார். ” என்ற கதையை சொல்லிவிட்டு, ஜெ. வைப் பார்க்க, ஜெ.கோப முகத்தோடு பண்ருட்டியைப் பார்க்கக்கூட இல்லை. இந்தக் கதை ஒவ்வொருவராலும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. தே.மு.தி.க.வினர்,” அப்ப, ஜெ.ங்குற அரசனை முதலமைச்சராக்கிவிட்டு, எப்போதும், நம்ம கேப்டன் என்னிக்குமே ஒரு விவசாயியாத்தான் நிக்கணுமா? இவங்களை முதலமைச்சராக்கத்தான் எங்க கேப்டன் கட்சி ஆரம்பிச்சாரா? இந்தம்மாதான் எப்போதும் முதலமைச்சர்னா, அப்புறம் நாங்க எதுக்கு கேப்டன் பின்னால வரணும்?”என்று குமுறுகிறார்களாம். இதே கதையை அ.தி.மு.க.வினர் வேறு மாதிரி எடுத்துக் கொள்கிறார்கள். “இந்தாளு மக்கள் மனச உழுது கட்சிங்குற விதையைப் பயிரிட்டாதான் எங்கம்மா ஜெயிக்க முடியும்முனு கதை சொல்றாங்களா? இப்பகூட அந்தாளு வேணும்னேதான் வராம இருக்காரு . வந்தா, எதிர்கட்சிக்காரங்க சொல்ற மாதிரி எங்கம்மாவ முதலமைச்சர்னு சொல்லணும்னேதான் வரல. அந்தாளு உழைக்கிற உழைப்பு எங்களூக்கு தெரியாதா? தப்பு தப்பா பேசிக்கிட்டு…. எங்க கூட்டணிக்கு ஓட்டுப் போட நினைக்கிறவங்க கூட இந்தாளு பேசுறத பாத்துட்டு போட மாட்டான். அந்தாளு பிரச்சாரம் பண்றத நிறுத்திட்டு வீட்லயே இருந்தாக்கூட நாங்க ஜெயிச்சுடுவோம். நாங்க தோத்துப்போனா அந்தாளுதான் காரணம். அதுக்கப்புறம் இருக்கு அந்தாளுக்கு. …”அன்று பொரிகிறார்கள், அ.தி.மு.க.வினர். மற்ற கூட்டணிக் கட்சியினரோ “அந்தம்மா கூப்பிட்டதுக்காக பிரகாஷ் காரத், சந்திரபாபு நாயுடு தா.பா.., ஜி.ஆர்., சரத் குமார், கிருஷ்ணசாமி எல்லோரும் பிரச்சாரம் செய்யாம வேந்தன் அழைத்தார்னு விருந்துக்கு வந்துட்டாங்களாம். ஆனா, விஜயகாந்த்ங்குற கடமை தவறாதவன் விருந்து சாப்பிட வராம பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்கிறாராம். இப்படியொரு கதையச் சொல்லி எங்க தலைவர்களை கேவலப்படுத்தியிருக்கிறார் பண்ருட்டி. நாங்க கூட்டணி தர்மத்த மதிக்கிறதாலதான் பொறுத்துகிட்டு இருக்கோம்” என்கிறார்கள், பற்களைக் கடித்தபடி. இப்படியொரு நிலைமையில் ஜெ.வின் பொற்கால ஆட்சி அமையுமா? என்று பேசிக்கொண்டே நகர்ந்தனராம், கூட்டத்தினர்.

2. குமாரபாளையத்தில் புதன்கிழமை ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டபோது வழியில் மேட்டுக்காடு எனும் கிராமத்தில் இருந்த ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்த சொல்லி டீ சாப்பிட்டார்.டீ குடித்துக்கொண்டெ” தொழில் எப்படி போகுதும்மா?” என்று கேட்டார். ” நல்லாப் போகுதுங்கய்யா” என்றார் கடை பெண்மணி தனலட்சுமி. . அதே சமயம், கடையை நோட்டம் விட்ட ஸ்டாலின் அங்கு ஜெ.படம் போட்ட காலண்டர் மாட்டியிருப்பதை கண்டார்; ” நீங்க எந்த கட்சிம்மா?” என்று கேட்டார் ஸ்டாலின். கடைக்கார தனலட்சுமியோ தயக்கமாய், ”ஏ.டி.எம்.கே.”என்றார். ” அதுக்கு ஏன் தயங்குறீங்க? எங்க ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கு? என மீண்டும் ஸ்டாலின் கேட்க,” ஒரு ருபாய் அரிசியிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வரை கொடுத்து மக்களைக் கவர்ந்திருக்கீங்க. நல்லாட்சி நடக்குது.” என்றார் தயங்காமல். இதை கேட்டு உற்சாகமான ஸ்டாலின் ”ரொம்ப மகிழ்சிம்மா” என்றபடி அங்கிருந்து கிளம்ப, உடன் வந்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

3.உச்ச நட்சத்திரத்திடம் ஆசி வாங்க போனார் சன் வேட்பாளர். அவருக்கு ஆசிர்வாதம் கிடைத்தது . இதே போல, ஆசி வாங்கி வரப் போனார், லீஃப் வேட்பாளர். ஆனால்,’ சார் இல்லை’ என கேட்டிலேயே திருப்பி அனுப்பிட்டாங்களாம்.

4. எந்த தேர்தலிலும் இல்லாதபடி இந்த தேர்தலில் சரக்கு சங்கதி பிரச்சாரத்தில் ஹைலைட்டாக இருக்கிறது. நிதானமில்லாமல் பேசுகிறார் என விஜயகாந்தை தலவர்கள் எல்லோரும் வாரிக்கொண்டிருக்க வடிவேலுவோ நேரடியாக ‘சரக்கு பார்ட்டி’ என திட்டிக் கொண்டிருக்க ‘ஏழு மணிக்கு மேல் வடிவேலு அடிக்கிற சரக்கு சங்கதி எனக்குத் தெரியும’ என பதிலுக்கு சிங்கமுத்து வாருகிறார்.”குடிக்கிறவங்கல்லாம் கெட்டவிய்ங்கன்னு பிரச்சாரம் பண்றதை உடனே நிறுத்தணும். இல்லேன்னா…. குடிகாரங்களை அவமானப்படுத்துவதா தேர்தல் கமிஷனிடம் கம்ப்ளெட்ன்ட் பண்ணுவோம்” என மதுரை டாஸ்மாக் நுகர்வோர் சங்கம் போட்டுத் தாக்க … இந்த சமயத்தில் புது பிராந்தியைத் தயாரித்து விற்பனைக்கு விட்டிருக்கிறார்களாம் தயாரிப்பவர்கள்!.

Advertisements