nelliapparkanthimathi-நெல்லையப்பர்-காந்திமதி

nelliapparkanthimathi-நெல்லையப்பர்-காந்திமதி

1. நெல்லையப்பர்- காந்திமதி கொயில் :-
இறைவனுக்கு அமுது படைக்க நெல்லையப்பர் சன்னிதியில் நெல்லை உலர்த்தும்போது நெல் நனையாமல், வேலிபோல் தடுத்ததால், ‘திருநெல்வேலி’ என்ற பெயர் உண்டானது. நெல்லையப்பர் கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் தனித்தனியாக கோவில்கள் உள்ளன. தங்க அல்லிக்குளம், இசைத் தூண்கள், ஆயிரங்கால் மண்டபம் ஆகியவை இக் கோவிலின் தனிச் சிறப்புகள்.
2. குற்றாலம்:-
ஜூன் மாதம் தொடங்கி, ஆகஸ்ட், செப்டம்பர் மாதம்வரை இங்கு சாரல் பருவகாலம் தொடரும். இங்குள்ள அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகை குணம் கலந்திருப்பதால், இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. அருவிகளில் நீராடுபவர்கள் மெயின் அருவி அருகில் கோவில் கொண்டுள்ள குற்றாலநாதரையும் தரிசித்துச் செல்கிறார்கள். இக்கோவில் இறைவனை திரிகூட ராசப்பகவிராயர் புகழ்ந்து பாடியதுதான் குற்றாலக் குறவஞ்சி.
3. குறுக்குத்துறை முருகன் கோவில்:-
திருநெல்வேலியில் தாமிரபரணி பாயும் இடத்தில் இக் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பாறையில் இருந்துதான்1653-ம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் சிலை வடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
4. பாபனாசம்:-
இது பாபங்கள் அனைத்தையும் நாசம் செய்யும் இடமாகக் ருதப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. அகத்தியருக்கு இங்கு கோவில் உள்ளது. சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு நேரில் காட்சி தந்த இடம் இது. திருநெல்வேலியில் இருந்து 42 கி.மீ. தொலைவில் பாபநாசம் அமைந்துள்ளது.
5. சங்கரன் கோவில்:-
சிவனும் பெருமாளும் ஒன்றாக இணைந்திருக்கும் கோவில் இது. இங்குள்ள இறைவன் சங்கரநாராயாணர் என்று அழைக்கப்படுகிறார். இது தவிர, சிவனுக்கும் பார்வதிக்கும் தனித்தனி சன்னிதிகளும் இங்கு உண்டு. திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் சங்கரன் கோவில் அமைந்துள்ளது.
6. தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்;-
வடக்கே ஒரு காசி இருப்பதுபோல் இது தெற்கே உள்ள காசி; தென்காசி . இங்கு புகழ் மிக்க காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
7. அம்பாசமுத்திரம்:-
காசி விஸ்வநாதர் கோவில், புருஷோத்தம பெருமாள் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் என்று பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்யலாம்.
8. ஆத்தங்கரை பள்ளிவாசல்:-
திருநெல்வேலியிலிருந்து 46 கி.மீ.தொலைவில் உள்ளது, இந்தப் பள்ளிவாசல். இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முஹம்மது இருவருக்கும் கோபுரக் கூடுகள் உள்ளன. அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் இடம் இது.
9. உவரி:-
இங்கு புகழ் மிக்க சுயம்புலிங்க கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதம் நடைபெறும் விசாகத் திருவிழா புகழ் பெற்றது.
10. அதிசய தூங்கா புளிய மரம்:-
திருச்செந்தூர்- கன்னியாகுமரி கடற்கரைச் சாலையோரம் அமைந்துள்ள குட்டம் என்ற ஊரில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி அம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் இது. இந்த தூங்கா புளிய மரத்தின் இலையை பிரசாதமாக உட்கொண்டால் தீராத நோயும் தீருமாம்.
11. திருச்செந்தூர்:-
சிவபெருமானுக்கே பிரணவத்தின் பொருளுரைத்த முருகன், இங்கு பக்தர்களைக் காக்கும் பால முருகனாய் எழுந்தருளியுள்ளார். தவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவர்களை ஆட்கொண்டு நல்வழிப்படுத்துவது என்ற உயர்ந்த கருத்தைக் கொண்ட சுப்ரமணிய சுவாமி, சூரபத்மனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இதனால், அன்று முதல், ‘சேவற்கொடியோன்’ என்ற திருப் பெயரும் பெற்றார். அன்று தேவர்களைக் காத்து நின்ற கந்தன் இன்று பக்தர்களைக் காத்து, வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் கொடுத்து காத்தருளும் தெய்வமா கசெந்திலம்பதியில் செந்திலாண்டவராக அருள்பாலிக்கிறார். சூரனை வதம் செய்தபின் முருகப் பெருமான், தன் தந்தைக்குப் பூஜை செய்ய விரும்பினார். கையில் மலர் எடுத்து, சிவபெருமானை பூஜித்த சுப்ரமணியரை, தேவர்கள் பக்தி பரவசத்தில் அழைத்தனர். அவர்களின் குரல் கேட்டு திரும்பிய முருகன், அவர்களுக்கு அன்று காட்சி அளித்த கோலத்திலேயே இன்றும் ஒரு கையில் மலர் ஏந்தி, நின்ற நிலையிலேயே காட்சி அளிக்கிறார்.ஐப்பசி மாதம் இங்கு நடைபெறும் சூர சம்ஹாரம் பிரபலமானது.
12. குலசேகரப்பட்டினம்:-
திருச்செந்தூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு முத்தாரம்மன் கோயில் கொண்டுள்ளார். இங்கு நடைபெறும் நவராத்திரி தசரா திருவிழா புகழ் பெற்றது.
13. ஸ்ரீவைகுண்டம்:-
திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலமான இங்கு ஸ்ரீவைகுண்டபதி கோவில் கொண்டுள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகள் இங்கு உள்ளன.
14. மணப்பாடு:-
இங்கு ஆதிகால ரோமன் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இந்தத் தேவாலயத்தில் உள்ள சிலுவை ஜெருசலேமில் இருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஊரை ‘சின்ன ஜெருசலேம்’ என்றும் அழைப்பதுண்டு. திருச்செந்தூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் வங்கக் கடற்கரையோரம் மணப்பாடு அமைந்துள்ளது.

பகத்ர்கள் ஒருமுறை நெல்லை- தூத்துக்குடி சென்று ஆலயங்களைத் தரிசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisements